அஹம் த்ருச்ய வஸ்து ந ச:

ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் 1236வது ஜெயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024 இன்று, அவரின் அத்வைத வேதாந்தத்தை பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை.

மனிஷா பஞ்சகம் என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் ஒரு வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது காணப்படும் பொருள்அல்ல: என்பதைப் பற்றிய ஓர் விளக்கக் கட்டுரை.

‘நான்’ என்பது உருவமற்றது எல்லா இடங்களிலும் நான் இருக்கிறேன், ஆனால் அது உணவில், உடலில் முக்கிய மூச்சு என மட்டுமே உணரப்படுகிறது. இது ஸ்ரீ நிசர்கதத்தா மகாராஜ் அவர்களின் உபதேசம்.

ஆம் ‘இருப்பு’ என்பது ‘நான்’ எனும் ஒரே இருப்பாக எல்லா இடங்களிலும் வியாபிதுள்ளது. எனினும் அது உணவு மற்றும் முக்கிய பிராணன் இவைகளில் வழியாக மட்டுமே, தனித்தனி ‘நான்’ என உணரப்பட்டு கொண்டிருக்கிறது. எப்போது உட்கொள்ளப்படும் உணவும், சுவாசமும் நின்று போகிறதோ அப்போதே ‘இருப்பானது, இல்லை’ என்பதாகவும் கற்பிக்கப்படுகிறது.

வாஸ்துவத்தில் தூயஇருப்பு’ என்பது பிறப்பற்றதாக, அழிவற்றதாகவே இருந்து கொண்டிருக்கிறது. அது உணவாலும், உடலின் மூச்சாலும் மட்டுமே அறியப்படும் பொழுது ‘அது’ பிறந்ததாகவும், உணவும், சுவாசமும் நின்று போகும் போது ‘அது’ இறந்ததாகவும் கற்பிக்கப்படுகிறது. உண்மையில் ‘அது’ எது ஒன்றினாலும் பிறப்பிக்கப்படுவதும் இல்லை அவ்வாறே ‘அதனால்’ பிறப்பிக்கப்பட்டது என்பதும் ஏதுமில்லை. சர்வ வியாபியாக எங்கும் ‘அது’ ஒன்றே என நிறைந்து இருக்கிறது.

இத்தகைய இருப்பின்’ சர்வ வியாபகத்துவம், மகான்கள் மற்றும் முனிவர்களின் ஜீவ சமாதியில் பரிபூரணமாக நிறைந்து இருப்பதை அங்கு சென்று அமரும் போது எவரும் உணரலாம். அதாவது அத்தருணத்தில் எண்ணங்களின் குவியிலான மனமானது, எங்கும் நிறைந்த தூய இருப்பில்’ ஒடுங்கி இருக்கும். அச்சமயத்தில் கிட்டும் பேரானந்தத்தின் மூலமாக அதை உணரலாம், ஏனெனில் பேரானந்தம் என்பதே எங்கும் நிறைந்த தூய இருப்பின்’ தன்மையாகும்.

அதாவது எங்கும் நிறைந்த இருப்புக்கு’, பிறப்பும் இறப்பும் உண்டு என்று தவறாக அறியப்பட்டு கொண்டிருந்த அறிவானது மறைந்து போகும் போது, அதனுடன் மனமும், அதுவரை உணவு மற்றும் முக்கிய பிராணன் இவைகளில் வழியாக மட்டுமே தனித்தனி ‘நான்’ என உணரப்பட்டு கொண்டிருந்த இருப்பும்’ இல்லாமல் போய்விடும். பின்னர் நித்திய பேரானந்தம் கொண்ட, சர்வ வியாபகத்துவமான தூயஇருப்பு’ ஒன்றே, எங்கும் நிலை பெற்றிருப்பதை உணரப் பெறலாம். அதாவது ‘நான்’ என்பது காணப்படும் பொருள் அல்ல என்பதை உணரலாம்.

ஶ்ரீ குருப்யோ நமஹ🙏

Leave a comment