” Stood in the middle”

நடுவுநின் றார்க்கு அன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை
நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர்
நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே”
திருமூலரின் திருமந்திரம்:320

பார்ப்பவனுக்கும், காணும் பொருளுக்கும் இடையிலான பிரிவினையின் இந்த உணர்வு, மனதில் அமைந்துள்ளது. இதயத்தில் எஞ்சியிருப்பவர்களுக்கு, பார்ப்பவர் பார்வையுடன் ஒன்றாகிறார். என்பது ரமண மகரிஷியின் அனுபவ அருள் உபதேசம்.

பார்ப்பவருக்கும் பார்க்கப்படும் பொருளுக்கும், அறிபவருக்கும் அறியப்படும் பொருளுக்கும் இடையே உள்ள இந்த உணர்வுக்கு ஆதாரம்  இதயம் ஆகும். இதயம் என்பது  ஒரு பௌதீக பொருள் அன்று, மாறாக உடம்பின் மத்திம ஸ்தானமாக விளங்கும் நாபிக்கமலத்தில் அந்தர்யாமியாக ஒளிரும் ஆன்மாவே ஆகும். உணர்வுமயமான மனமானது மூலமாகிய ஆன்மாவில் ஒடுங்கும் போது, அவ்-உணர்வு தூய உணர்வாகிறது.

 “பிராணன் ஒடுங்க மனம் ஒடுங்கும்” என்பதும் பகவான் ரமண மகரிஷியின் அனுபவ அருள் உபதேசம். அதற்கு “கூரிய நாதன் குருவின் அருள்பெற்றால், வாரிப் பிடிக்க வசப்படுந் தானே” என்னும் திருமூலரின் திருமந்திர  பாடல் வழிகாட்டுதல் படி, பிராணங்கள் என்னும் வாசிகளை குருவின் அருள்பெற்று முறையாக பிடித்தால் இவ்விரண்டும் ஆன்மாவில் ஒடுங்க, உணர்வுமயமான மனமும் ஒடுங்கி தூய உணர்வு பிரகாசிக்கும்.

இத்தகைய தூய உணர்வே திருமூலர் சொல்லும் நடுநிலைமையாகும். அவ்விழிப்புணர்வு செயல்படாது போனால், பார்பவர் மற்றும் பார்க்கப்படும் பொருள் அல்லது அறிபவர் மற்றும் அறியப்படும் பொருள் என்னும் இவ்விரண்டும் இருந்தும் இல்லாதவையே!

அந்நடுவில் ‘விழிப்புணர்வாக’ நிற்பவரே தம் இறைவனை உண்மையாகப் பார்பவர், அத்தகைய ‘ஞானம்’ இன்றி வேறு எவரும் உண்மையாக தம் இறைவனை அறிய இயலாது.

அவ்வாறு அந்நடுவில் நிற்பவரே ‘விழிப்புணர்வு’ என்னும் சிவனருளால் நல்ல ‘தேவரும்’ ஆவர். ஆகையால் அத்தகையோருக்கு ‘நரகம்’ என்பதும் இல்லை. அவ்வாறு நடுவில் நின்றோர் வழியில் எம் குருவருளால் நானும் நின்றேனே!

இவ்வாறு நடுவு நின்ற வள்ளல்பெருமான் அந்த நடுநிலை பற்றி பாடிய பாடல்:
கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம்அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதிகொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் ‘நடுநின்ற நடுவே’
நரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே
என்அரசே யான்புகலும் இசையும்அணிந் தருளே.

திருச்சிற்றம்பலம்🙏🏿

Leave a comment