
‘கடவுள் இல்லை ஆனால் இருக்கிறார்’
“கணிதம் அதன் ரகசியங்களை அதன் சொந்த அழகுக்காக, தூய்மையான அன்புடன் அணுகுபவர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்துகிறது.” ஆர்க்கிமிடிஸ்
கணிதம்’ என்பது தனிப்பட்ட முறையில் அழகை கொண்டுள்ளதா, மற்றும் மனிதர்களின் தூய்மையான அன்பை உணரும் தன்மை உள்ளதா? அவ்வாறு இருப்பின் மனிதர்கள் அதன் அழகை எவ்வாறு காண்பது மேலும் தங்களின் அன்பை அதனிடம் எவ்வாறு வெளிப்படுத்துவது மற்றும் அதன் மூலம் கணிதத்தின் ரகசியங்களை எவ்வாறு அறிந்து கொள்வது?
ஒவ்வொரு மானுட தேகமும் கணித கோட்பாட்டின்படியே வடிவமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. மெய் வாய், கண், செவி, மூக்கு என்று தேகத்தின் வெளிப்பாடாக விளங்கும் ஐம்புலன்களும் அதன் உள் மற்றும் வெளி உறுப்புகளும் கனக்கச்சிதமாக வடிவமைக்கப்பட்டு இயங்கிக் கொண்டு இருப்பதால்தான், கணித(அணு) வடிவான மானுட வடிவம் தனக்குத்தானே அழகு உடையதாக ஆயிற்று. மாறாக மனித வடிவில் வெளி உறுப்புகள் கணக்கற்ற முறையில் இருந்தால், அது அலங்கோலமாக இருக்கும்.
மேலும் இம்மானுட தேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ரத்தத்தின் மாதிரியை எடுத்து பரிசோதித்தால், அதன் பண்புகளின் முடிவுகள் அனைத்தும் எண்கணித அடிப்படையிலேயே இருக்கும். அதாவது ஒவ்வொரு பண்புகளின் எண்ணிக்கையின் அளவு குறைந்தாலும் அல்லது மிகுதியாக ஆனாலும் தேகம் பாதிப்புக்கு உள்ளாகி விடும். அவ்வாறு ஆகாமல் பண்புகளின் எண்ணிக்கையை ஓர் சமன்பாட்டு நிலையில் வைத்துக் கொண்டிருப்பது கணிதத்தின் தெய்வீக ஆற்றலே ஆகும்.
ஆனால் அந்தோ மானுடர்கள் கணிதத்தின் இந்த தனிப்பட்ட தெய்வீக சமன்பாட்டின் ஆற்றல் அழகை தம்முள் கண்டு தன்னைத்தானே நேசிப்பதை விடுத்து, மாறாக அக்கணித அளவின் அடிப்படையில் ஓர் சிற்பக் கலையை தாங்களே உருவாக்கி, அதன் மூலம் தன்னைப் போலவே ஒரு சிலையை வடித்து அதன் அழகினில் தானே மயங்கி, அதையே தெய்வமாகவும் பாவித்து, அஃதினில் தன் அன்பை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள், என் செய்ய!
‘தன்னை அறிய தனக்கொரு கேடில்லை’ என்னும் திருமூலரின் திருமந்திர சொல்படி, ஒருவன் தன்னை அறிய முற்படும்போது, கணிதத்தின் தெய்வீக சமன்பாட்டின் ஆற்றலின் அழகு தாமே வெளிப்படும். அது ‘பிறப்பும், இறப்பும்’ இல்லாத சமன்பாட்டின் ரகசியங்களை, உள்ளுணர்வாக அவனுள் அறிவித்து, அத்தகையவனை “ஸ்திதப் பிரக்ஞன்” என்னும் நிலைக்கு உயர்த்தி விடும்.
ஸ்திதப் பிரக்ஞன்’ என்பது சுத்தப்பிரக்ஞை என்னும் கிருஷ்ணன் தான்.
கிருஷ்ணன் என்பது என்ன? கிருஷ்ணன் என்பது முழுவிழிப்படைந்த அறிவுணர்வு அல்லது பிரக்ஞையின் குறியீடு. ‘ஸ்திதப் பிரக்ஞன்’ என்றால் வலது பக்கமும் இடது பக்கமும் சாயாத, கணித சமன்பாட்டை உணர்ந்த ‘சுத்தப் பிரக்ஞையின் முழுமை தன்னில் ஸ்திரமாக நிலைத்தவன்’ என்று பொருள். கிருஷ்ணன் என்று வெளியிலிருந்து யாரும் வரவேண்டிய அவசியமில்லை.
நீங்கள் தான் அது!

