“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”

“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்”
எல்லாமே எங்கும் விழுகிறது.வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.- ரூமி

ஆமாம் ஆதியில் ஆணின் உடம்பிலிருந்து ஓர்
விந்தணுவாக பெண்ணின் கர்ப்பப்பையில் விழுகிறது. அவ்வாறு விழுந்த ஒர் விந்தணு குழந்தையாக உருமாறி பூமியில் விழுகிறது. அவ்வாறு விழுந்த குழந்தையானது பசியினால் அழுது அதன் மூலம் உணவில் விழுகிறது. உணவினால் வளர்ந்த குழந்தை விளையாடும் பருவம் வரும்போது விளையாட்டில் விழுகிறது. வளர்ந்து வாலிப பருவம் வரும்போது காதலில் விழுகிறது, அதன் பின் சிற்றின்பத்தில் விழுகிறது. அதன் மூலம் உருவான பிள்ளைகளின்பால் பாசத்தில் விழுகிறது. அதன் பொருட்டு பொன்னாசையில் விழுகிறது, மன்னாசையில் விழுகிறது. இளமைக் காலம் கழிந்து முதுமை வரும்போது நோயில் விழுகிறது , அந்தத்தில் (முடிவில்) மரணக் குழியில் விழுந்து வெவ்வேறு பிறப்புக்களாக மீண்டும் மீண்டும் பிறந்து விழுவதற்கு தயாராகிறது. என் செய்ய, வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை என்பது சூபிஞானி ஹஸ்ரத் ரூமியின் ஆதங்க வெளிப்பாடு.

இவையனைத்திற்கும் மூல காரணம் ஈர்ப்பு சக்தியே. இதன் காரணமாகவே ஒன்றினால் ஒன்று ஈர்க்கப்பட்டுப் கொண்டும், விழுந்து கொண்டும் இருக்கிறது.

“கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர்” என்பது தமிழ் பழமொழி. விண்டவர்’ என்பதற்கு பகைவர்’ என்று பொருள் உள்ளது. ஆகவே இத்தகைய ஈர்ப்பு சக்தி என்னும் பகைமைக்குள் அகப்பட்டு கொண்டு இருப்பவர்கள் இதிலிருந்து மீளும் வழியை ஒருபோதும் கண்டிலர்! அதாவது “விண்டவர் கண்டிலர்”.

இதற்கு மாற்று வழி என்பது துறத்தல்’ என்னும் தன்மையில் மட்டுமே அடங்கப் பெற்றுள்ளது. துறத்தல்’ என்றால் மேற்கூறியவைகளை ஒவ்வொன்றாக துறத்தல் என்று பொருள் கொள்ளலாகாது. மாறாக இவை அனைத்திற்கும் காரணமாய் இருந்து கொண்டிருக்கும் ஈர்ப்பு சக்தி என்பதிலிருந்து தம்மை ஒட்டுமொத்தமாக விடுவித்துக் கொள்ளுதலே ஆகும்.

‘ஈர்ப்பு விசையின் எதிர் விசை மையவிசை ஆகும். பூமியின் சுழற்சியின் காரணமாக, மையவிலக்கு விசை என்பது ஈர்ப்பு விசைக்கு எதிர் விசையாகும். நியூட்டனின் சட்டத்தின் மூன்றாம் விதியில், சாதாரண விசை அல்லது எதிர்வினை விசை ஈர்ப்பு விசையின் எதிர் விசை என்றும் அறியப்படுகிறது.’

“பூமிப்பந்தின் மையப்புள்ளி அமைந்துள்ள இடத்தில் சிதம்பரம் நடராஜர் கோவில் இருப்பதோடு, காந்த சக்தியின் மையப்புள்ளியானது நடராஜரின் கால் பெருவிரலில் இருப்பதாகவும் சர்வதேச ஆன்மிக ஆராய்ச்சியாளர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளார்கள்,”

மேலும், இவ்வளவு பெரிய ஈர்ப்பு விசையின் தாக்கத்தை சமாளிக்க, மையவிலக்கு அச்சு நீளத்தில் சிறியதாக இருக்க வேண்டும். அதனால் நடராஜப் பெருமானின் வலது பெருவிரல், அதாவது ஆண் பகுதி, இடது கால் பெருவிரலின் பெண் பாகத்தை விட சற்று குறைவாக இருக்கும். இந்த விதி அனைத்து வாழும் மனிதர்களுக்கும் பொருந்தும். அதனால்தான், நடராஜப் பெருமான், அம்மனுடனான பிரபஞ்ச நடனப் போட்டியின் போது, தனது வலது பெருவிரல் மூலம் தனது கருணைமிக்க மையவிலக்கு விசையைப் பிரயோகித்து, மாயையின் ஈர்ப்பு விசையை வென்றார்.

அது போன்று தம்மானுட தேகத்தின் மையப்புள்ளி எது என்பதை குருவருளால் கண்டறிந்து, அஃதினில் தில்லை நடராஜப்பெருமான் போன்று தம்வலது கால் கட்டை விரலை மட்டும் ஊன்றி நின்று தவம்’ புரிய தெரிந்தவர்கள், துறத்தல் என்னும் அதிகாரத்தின் மூலம் ஈர்ப்பு சக்தி என்னும் பகைமையை வென்று எங்கும் விழாமல் தம்மைதாமே காத்துக் கொள்வார்கள்.

இவ்வாறு விண்டவர்’ என்னும் பகைவரை வெல்லும் வழிதனை “கண்டவர் விண்டிலர்”, அதாவது மீண்டும் ஒருபோதும் ஈர்ப்பு சக்தி என்னும் பகைமைக்குள் சிக்கி எங்கும் விழாமல் தம்மைதாமே காத்துக் கொள்வார்கள்.

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment