“புள்ளிக்கு முந்தியது ஞானம்.”

“புள்ளிக்கு முந்தியது ஞானம்.”
பரமகுரு என்பது சமஸ்கிருதச் சொல்லாகும், இதன் பொருள் “முந்தைய குரு” அல்லது குருவின் குரு.

என் பரம குருவும் தந்தை பெரியாரும் ஒரு முறை ரயிலில் ஒரே பெட்டியில் பயணிக்க நேர்ந்தது. அச்சமயம், தந்தை பெரியார் என் பரமகுருடன் மெய்ஞானத்தை பற்றியும் ஆன்மீகத்தை பற்றியும் வாதிட விரும்பினார்.

அவ்வாறே முதலில் வாதத்தை தொடங்கிய என் பரமகுரு தன்கையில் இருந்த கைத்தடியால் பூமியில் ஒரு புள்ளியை வரைந்து, இப்புள்ளியிலிருந்து தான் ஆன்மீகத்தைப் பற்றியும் மெய்ஞானத்தை பற்றியும் எண்ணற்ற புத்தகங்கள், எண்கள் மற்றும் எழுத்துக்கள் வடிவில் தோன்றியிருக்கிறது. ஆகவே இவற்றையெல்லாம் விடுத்து, அப்புள்ளிக்கு முன்பே உள்ளதை பற்றி வாதிடலாம் என்று கூறவும், தந்தை பெரியார் மௌனமாகிவிட்டார்.

அவ்வாறு புள்ளிக்கு முன்பு உள்ளதை என் குருவின் மூலமாக கற்ற ஞானத்தை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொருவரின் உண்மையான வடிவம் பிராணனின் வடிவம் மட்டுமே. பிராணனின் வடிவத்தின் பண்புக்கூறுகள் பின்வருமாறு:

அதற்கு நான் என்றோ, எந்தப் பெயரோ, பாலினம் போன்ற தனிப்பட்ட அடையாளமில்லை. அதாவது, அதற்கு அகங்காரம் இல்லை.

அதற்கு அறிவுசார்ந்த அல்லது அலைபாயும் எண்ணங்கள் இல்லை. அதாவது, அதற்கு புத்தியும் இல்லை, மனமும் இல்லை.

பூமி, நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து கூறுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதாவது, அதற்கு கடினமான வடிவ உடல்கள் ஏதுமில்லை. அதாவது பிராணனுக்கு பூமி, நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்,மனம்,புத்தி, அகங்காரம் எனும் இந்த எட்டு பிரபஞ்சக் கொள்கைகளைப் பற்றிய அறிவு எதுவும் இல்லை.

சுவாசம் என்பது பிராணன் அல்ல. பிராணன் என்றால் சமஸ்கிருத மொழியில் ஸ்பந்தம் என்று பொருள். ஸ்பந்தம் என்பது அமைதியின் அசைவின் சப்தத்தை குறிக்கிறது.

ஸ்பந்தம் அல்லது பிராணனின் ஒலியின் காரணமாக, இரண்டு உள் மற்றும் வெளிப்புற சுவாசங்கள் உருவாக்கப்படுகின்றன, மேலும் இந்த இரண்டு உள் மற்றும் வெளிப்புற சுவாசங்களால், எட்டு உலகளாவிய பண்புகளைக் கொண்ட உடல்கள் தனித்துவமாக வெளிப்படுகின்றது.

எண் கணித அறிவின் மூலம் விவரிக்கப்படும் போது, ‘பூஜ்ஜிய’ அமைதியானது ‘இரண்டு’ உள் மற்றும் வெளிப்புற சுவாசங்களாக மாறி, பஞ்சபூதங்களுடன் கலந்து பிரபஞ்சத்தின் ‘எட்டு’ பண்புகளின் உடலாக வெளிப்படுகிறது.

ஆன்மீக அறிவின் மூலம் விவரிக்கப்படும் போது, ‘ஈஸ்வரன்’ எனும் அமைதியின் அசைவானது ‘ஸத்’ எனும் உள் மற்றும் வெளிப்புற சுவாசமாக மாறி, பஞ்சபூதங்களுடன் கலந்து பிரபஞ்சத்தின் ‘அஸத்’ பண்புகளின் உடலாக வெளிப்படுகிறது.

இருப்பினும், இந்த நிகழ்வுகளின் காட்சிகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன மற்றும் ஒரே நேரத்தில் மறைந்தும் போகின்றன..

இதன் விளைவாக, உண்மையான இருப்பு என்பது எண்ணியல் அறிவு தொடங்குவதற்கு முன்பே, அதாவது ஒற்றைப் புள்ளிக்கும் முன்பே, சமயம், ஞானம் பற்றிய அறிவு உருவாவதற்கும் முன்பே உள்ளது. ஒரு உண்மையான பிரம்ம ஞானியின் வடிவம் தெய்வீக ஒலி மற்றும் ஒளித் துகள்களை மட்டுமே கொண்டுள்ளது. இதைத் தவிர வேறு எதுவும் அதில் இருக்க முடியாது. எனவே, சத்குருவின் நிலைகளில் பிரம்ம ஞானி என்று அழைக்கப்படுபவர் மட்டுமே இந்த பண்பை உண்மையான தேடுபவரிடம் கொடுக்க முடியும்.

இவ்வாறு எண்ணியல் அறிவு தொடங்குவதற்கு முன்பே, விளங்கிக் கொண்டிருந்த அருட்பெருஞ்ஜோதியை உணர்ந்த வள்ளல் பெருமான்,
“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி” என்று தம் அகவலிலும்,

ஆன்மீகம் மற்றும் மெய்ஞானம் எழுத்துக்களாக உருவாவதற்கும் முன்பே உள்ளதை உணர்ந்து அறிந்த திருமூலர் தம் திருமந்திரத்தில்
“எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளை” என்றும் குறிப்பிட்டு பாடியுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உண்மையான இருப்பின் தன்மையை வள்ளுவர் பெருமானும்,
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
ஸ்பந்தம் என்னும் அமைதியின் அசைவின் சப்தம், ‘அகரம்’ முதலிய எல்லா எழுத்துக்களுக்கும் முன்பே, ‘ஆதிபகவனுக்கும்’ முன்பே, ‘உலகம்’ தோன்றுவதற்கும் முன்பே, இருந்து கொண்டிருக்கின்றது என்னும் மெய்ப்பொருளாக தம் முதல் திருக்குறளில் கூறியுள்ளார்.

இறுதியாக இது பிருஹதாரண்யக உபநிஷத்தில் இருந்து எடுக்கப்பட்டது

1.எது வானத்திற்கும், பூமிக்கும், அதற்கு அப்பாலும்குறுக்கிலும் நெடுக்கிலும் வியாபித்துள்ளது ? – என்னும் கார்கி அம்மையாரின் கேள்விக்கு,

ஆகாயம் கார்கி – என்பது ரிஷியாக்ஞவல்கியரின்பதில்.

2. மீண்டும் ஆகாயம் எதில் கோர்க்கப்பட்டுள்ளது ?- என்னும் கார்கி அம்மையாரின் கேள்விக்கு,

கார்கி அதை அழிவற்ற அக்ஷரம், (அக்ஷரம் என்றால் சப்தம் என்று பொருள்) என்று பகர்வார்கள். இதில்தான் ஆகாயம் குறுக்கிலும் நெடுக்கிலும்கோர்க்கப்பட்டுள்ளது என்பது ரிஷியாக்ஞவல்கியரின்பதில்.

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏🏿

Leave a comment