
“உருவம் துறந்தார் ஒளியில் கலந்தார் “
“காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ் ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்:153-154
ஒளி அதிர்வுகளை தன்னுள் வாங்கி அதை காட்சிகளாக வெளிப்படுத்தும் வெண்திரை எந்த காட்சியும் காண்பதில்லை. அதுபோன்று வெட்டவெளி எனும் திரை அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் தனதில் வெளிப்படுத்தும் உருவக் காட்சிகளை, அது காணாது எனினும் காட்சிகளை நகர்த்திக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொருவரின் ‘விழிப்பு நிலையில்’ அது காட்சிகளாகவும், உறங்கிய பின் உருவாகும் ‘கனவு நிலையில்’, உறங்குபவனின் காட்சிக்குள் காட்சியாகவும், மேலும் ஆழ்ந்த ‘உறக்க நிலையில்’ காட்சிகள் மற்றும் நகர்வுகள் என்று ஏதுமில்லாத கருமை படர்ந்ததாகவும் அது தந்து கொண்டேயிருக்கிறது.
இவ்வாறு விழிப்பு, கனவு, உறக்கம் என்று தொடர்ந்து மாறி மாறி வந்து கொண்டிருக்கும் இம்மூன்று நிலைகளும் ஓங்காரத்தின் மூன்று மாத்திரைகளால் ஆன அகாரம், உகாரம், மகாரம் இன்னும் பகுதிகளே ஆகும். மாத்திரை என்பது ஒரு கால அளவை குறிப்பதற்கான சொல்லாகும்.
விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் இம் மூன்று நிலைகளுக்கும் ஆதாரமாக விளங்கிக் கொண்டிருக்கும் வெட்ட வெளியே…மாற்றமில்லாத, மாத்திரைகளே இல்லாத, நான்காவது நிலையான துரியம் எனப்படும் ஓம்காரத்தின் முழுமையான தன்மையாகும்.
வெட்ட வெளி என்னும் துரியத்தையும் கடந்து ஒளிர்ந்து கொண்டிருப்பது அருட்பெருஞ்ஜோதியின் ஆற்றல்.
“துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றது என்று உந்தீபற
துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்
அருளிய திரு உந்தியார். பாடல் 32.
‘துரியம்‘ கடந்த அந்நிலையில் ‘சாக்கிரம்‘ என்னும் விழிப்பு நிலை துரியமாக நிற்க, ‘துரியாதீதம்‘ என்னும் அந்நிலைக்கு துணையாக… அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றல் நிற்கும்போது…
–காற்றின் தன்மையால் கற்பூரத்தின் உருவம் முழுவதும் கரைந்து மறைந்தே போய்விடுவது போன்று… அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் இவ் அணுக்கத் தொண்டர்கள் தம் உருவம் முழுவதையும் சிவ ஜோதியில் துறந்து பரிபூரண சுகத்தை எய்துவார்கள்!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

