
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.”
பிறவிப் பெருங்கடலை நீந்துவது என்பது இக்கரையிலிருந்து அக்கரைக்கு செல்வது என்பதாகாது. மாறாக உப்பு மணியாக ஒருவர் தம் தேகத்தை ஆக்கும்போது , பிறவிப் பெருங்கடலும் ஓர் சிறந்த கரைப்பான் ஆகி அத்தேகத்தை முழுமையாக தன்னுள் கரைத்துக் கொண்டு அமைதி மற்றும் தூய்மையின் கடலாக காணப்படும். அவ்வாறு கரைந்தபின்(நீந்திய பின்), “நம்பிக்கை அவநம்பிக்கை, பயம் சந்தேகம், மதம் ஆன்மீகம், சரி தவறு, விருப்பு வெறுப்பு, பெயர் பாலினம், உடல் ஆன்மா, வடிவம் உருவமற்றவை, இருப்பது இல்லாதது, வெளி காலம், அறிவு அறியப்பட்டவை – எதுவும் எஞ்சாது. இதயத்தில் ஒரு நட்சத்திரம் தோன்றும். “அந்த நட்சத்திரத்தின் ஒளியில் சொர்கம் போன்ற இருப்பதாக சொல்லப்படும் ஏழு உலகங்களும் தென்படாது.”
அவ்வாறு கரையும் தன்மைகொண்ட உப்பு மணியாக தம்தேகத்தை ஆக்கிக்கொள்ள இயலாதவர்கள், அதாவது காமம்,குரோதம், துவேசம்,லோபம், மோகம்,மதம்,மாத்சரியம் என்னும் ஏழுகுணங்களால் கட்டுண்டவர்களின் தேகமானது அமைதிப் பெருங்கடலில் கரைய இயலாததால், அத்தகையவர்களுக்கு அது நீந்த முடியாத பிறவிப் பெருங்கடலாகவே இருக்கும். அதன் காரணம் வெவ்வேறு உருவம் கொண்ட பிறப்புக்களாக மாறி மாறி, “நம்பிக்கை அவநம்பிக்கை, பயம் சந்தேகம், மதம் ஆன்மீகம், விருப்பு வெறுப்பு, பெயர் பாலினம், உடல் ஆன்மா, வடிவம் உருவமற்றவை, இருப்பது இல்லாதது, வெளி காலம், அறிவு அறியப்பட்டவை என எல்லாமாக இருந்து கொண்டு, அப்பிறவிப் பெருங்கடலில் அங்கும் இங்குமாக இருளில் அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.
அதாவது ஒரே கடல்தான் பிறவிப் பெருங்கடலாகவும், அமைதி மற்றும் தூய்மையின் கடலாகவும் இருந்து கொண்டிருக்கிறது! அதில் தோன்றும் மனிதப்பிறவிகள் அக்கடலின் உப்பு தன்மையை அறிந்து, அதுபோன்றே தம்மையும் உப்பு மணியாக, அதாவது அருளுடையதாக ஆக்கிக் கொண்டால், அக்கடலில் கரைந்து, நீந்துவர் ஆகி இறைவனடி சேரலாம். அவ்வாறு அக்கடலின் தன்மையை உணர இயலாதவர்களுக்கு, அது நீந்த முடியாத பிறவிப்பெருங்கடலாக ஆகிப் போய்விட்டதால் அத்தகையோர் இறைவன் அடிசேரா தார்.
கிரேக்க தத்துவஞானி பித்தகோரஸ் கூறுகிறார்:
“மௌனத்தைக் கற்றுக்கொள்ளுங்கள். தியான மனத்தின் அமைதியுடன், கேளுங்கள், உள்வாங்கி, படியெடுத்து, மாற்றுங்கள்.”
வாழ்க தமிழ்🙏🏿 வாழ்க வள்ளுவம்🙏🏿

