“தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே”

“தன் கடன் அடியேனையும் தாங்குதல் 

என் கடன் பணி செய்து கிடப்பதே”

அப்பர் பெருமான் தேவாரம்;

சமூக மற்றும் ஆன்மீகம் பற்றிய ஒரு சிந்தனை;

பொதுவாக சமூகப் பணி என்பது வேறு ஆன்மீகப் பணி என்பது வேறு என்னும் கருத்துதான் மக்களிடையே நிலவி வந்து கொண்டிருக்கிறது.

ஆனால் சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் பெருமான்,

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு”

என்னும் குறளில் சமூகப் பணியையும் ஆன்மீகப் பணியையும் ஒருங்கிணைத்து அதை எவ்வாறு கையாள்வது என்றும் சொல்லி உள்ளார்.

இசை:என்பதிற்கு ஓசை மற்றும் சொல் என்று  பொருள்கள் உள்ளன.  திருநாவுக்கரசர் பாடிய “சொற்றுணை வேதியன் சோதி வானவன்” என்னும் பதிகத்தில் ‘சொற்றுணை’ என்பதற்கு சொல்லை துணையாக கொண்ட  அதாவது, சோதி வடிவாக உள்ள ‘நமசிவாய’ இன்னும் பஞ்சாட்சர மந்திரச் சொல்லின் ஓசையை, துணையாக கொண்ட அனைவருமே வேதியன் எனப்படுபவர்களே என்று பொருள் கொள்ளலாம்.

வள்ளுவர் கூறும் இசை பட வாழ்தல் என்னும்  இக்குறலுக்கு, ‘நமசிவாய’ என்னும் பஞ்சாட்சர மந்திர ஓசையை, இடைவிடாது இசைத்துக் கொண்டு  வாழ்தல் என்று பொருள் கொண்டால்…

“நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்

சிவம் என்னும் நாமத்தைச் சிந்தை உள் ஏற்ற”

என்னும் திருமூலரின் திருமந்திரச் சொல்படி ,

‘சிவாய’ எனும் நாமம் இடைவிடாது சிந்திப்பவர் தம்சிந்தையில் இசையாகி, அதுவே உயிர் வாழ ஏற்ற ஊதியமாகவும், அதாவது  உன்னதமான ஆன்மீக பணியாகவும், அதே சமயம் நாவில் ஒடுங்கிய ‘நம’ என்னும் இசை (நம; என்பதற்கு வணக்கம் என்று பொருள் உள்ளது) சிந்திப்பவர் உயிர்க்கு கிடைக்கப்பெற்ற ஊதியத்திலிருந்து உலகிற்கு வெளிப்படும் ஒர் ஈதலாகவும், அதாவது எல்லாம் சிவமயமாக கண்ட உலகிற்கு ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ இன்னும் அப்பர் பெருமானின் வாக்குப்படி வணக்கத்திற்குரிய எதிர்பார்ப்பு இல்லாத, சிறந்த சமூகப் பணியாகவும், தன் கடன் அடியேனையும் தாங்குதல் என்னும் தம்ஆன்மீக பணிக்கான விண்ணப்பமாகவும் ஒரே நேரத்தில் அமைந்து விடுகிறது.

வாழ்க வள்ளுவம்🙏 வாழ்க தமிழ்🙏

Leave a comment