ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது?

“ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது, அது ஒளிரச் செய்ததிலிருந்து எதையும் எடுக்காது.” என்பது சூபி ஞானி ஹஜ்ரத் ரூமியின் கூற்று.

இதில் ஒளி என்று அவரால் குறிப்பிடப்பட்டுள்ளது ஒவ்வொருவரின் இதயத்திலும் குடி கொண்டிருக்கும் ஆத்ம ஒளியே ஆகும். இவ்வொளியே ஒவ்வொருவரின் உடம்பையும் அதன் வழியே இவ் உலகத்தையும் ஒளிர்விக்கின்றது.

அதாவது ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அவரவர்களால் கண்டு உணரப்படும் இவ்வுடம்புக்கும், இவ்வுலகிற்கும் ஆதாரம், அவரவர்களின் இதயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் ஆத்மஒளியே ஆகும். எனினும் விழிப்பு நிலை கடந்து, கனவு நிலைக்கு செல்லும் போது இவ் ஆத்ம ஒளியானது விழிப்பு நிலையில் தம்மால் ஒளிர்விக்கப்பட்ட இவ்வுடம்பையோ அல்லது இவ்வுலகையோ எடுத்துச் செல்வதில்லை.

மாறாக வேறு ஒரு உடம்பையும் உலகத்தையும் கனவு நிலையில் தோற்றுவித்து ஒளிர்விக்கின்றது. கனவு நிலை கலையும்போது இவ் ஆத்ம ஒளியானது விழிப்பு நிலையில் உள்ளது போன்றே, கனவு நிலையில் தம்மால் ஒளிர்விக்கப்பட்ட அவ்வுடம்பையும், அவ்வுலகத்தையும் எடுத்துச் செல்வதில்லை.

விழிப்பு, கனவு என்னும் இவ்விரு நிலைகளையும் கடந்து ஆழ்ந்த உறக்க நிலைக்கு செல்லும்போது, இவ் ஆத்ம ஒளியானது தம்மால் ஒளிர்விக்கப்பட்ட இவ் இருவித உடம்புகளையும், உலகங்களையும் எடுத்துச் செல்லாமல் விட்டுவிட்டு, தன்னில் தானாகவே, ஆனால் அறியப்படாத நிலையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

அவ்வாறு அறியப்படாத அருட்பெருஞ்ஜோதி ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் அறியப்பட்டால்,ஹஜ்ரத் ரூமி உணர்ந்தது போன்று, ஒளி வடிவாகவே இருக்கும் தான், தம்மால் ஒளிர்விரிக்கப்படும் எதையும் எடுத்துச் செல்லப் போவதில்லை என்பதை உணர்ந்து என்றென்றும் மகிழ்வுடன் இருக்கலாம்.

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏

Leave a comment