“தவறிப்போய், தவறவிட்டவர்கள்”

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
உடம்பிடை நின்ற உயிரை அறியார்
உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே” .
திருமூலரின் திருமந்திரம்:

உடம்பும் உடம்பும் உடம்பைத் தழுவி
குழந்தை என்னும் ஓர் உடம்பை உருவாக்கி தழுவி மகிழ்வதற்காக, ஓர் ஆண் உடம்பும் ஓர் பெண் உடம்பும் ஒன்றையொன்று தழுவிக்கொண்டு,

உடம்பிடை நின்ற உயிரை அறியார்
ஆண், பெண், குழந்தை என்னும் இம்மூன்று வகை உடம்புகளுக்கும் இடையில் பொதுவாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரே உயிர்சக்தி எனும் பிராண சக்தியை பற்றி ஒருவரும் அறியார். வள்ளல் பெருமானும் தம் அகவல் 971-972 ல் இவ்வாறு பாடியுள்ளார்.
பயிர்ப்புறு கரணப் பரிசுகள் பற்பல
உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே
அதாவது விதவிதமான முகங்களுடன் காணப்படும் மனித வடிவங்கள் யாவுக்குமே உயிர்த்திரள்கள் என்பது ஒன்றேதான்.

உடம்போ டுயிரிடை நட்பறி யாதார்
மடம்புகு நாய்போல் மயங்குகின் றாரே
மடம், என்பதிர்க்குதிரியக்கோடல் அதாவது ஒன்றை மற்றொன்றாக மாறுபடக் கருதுதல் மற்றும் சத்திரம் என்று பொருள்கள் உள்ளது. அதாவது காட்சிப் பொருளாக இருக்கும் இம்மூவகை உடம்பின் ஆக்கத்திற்கும் ஒரே மூலப்பொருளாக, அவ்வுடம்புகளின் உள்ளேயே இணைபிரியாது ஊடுருவி இயங்கிக் கொண்டிருப்பது, காட்சிக்கு அப்பாற்பட்ட உயிர்சக்தி எனும் இப் பிராண சக்தியே ஆகும். இத்தகையை உயிர்சக்தி, இம்மானுட உடம்போடு கொண்டிருக்கும் நட்பை பற்றிய அறிவை அறியாமல்,

ஒன்றுக்கொன்று காட்சிப் பொருளாக இருக்கும் இவ்வுடம்பையே உண்மையென எண்ணி மயங்கும் எண்ணற்ற மாந்தர்களை, திருமூலர் இங்கு நாயோடு ஒப்பிட்டு கூற காரணம்?

அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மானுடப் பிறவியில் வாழ்ந்து கொண்டும், இவ் உயிர்சக்தியை பற்றிய அறிவை உணராது போனால், மரணம் அல்லதுதவறிப்போனார்என்னும் சம்பவமாக, இம் மானுட உடம்புடன் உயிர் கொண்டிருந்த நட்பானது நழுவிப் போக,
நாயைப் போன்ற கீழான உடம்புகளில், தாம் முன்பு தவறவிட்டகிடைத்தற்கரிய மானுட உடம்பின் உயர்வை எண்ணி எண்ணி நொந்து கொண்டு, எவ்வாறு பல அடுக்குகளை கொண்ட சத்திரத்தில் புகுந்த நாயானது வாயில் வழியை அறியாது மயங்கிக்கொண்டிருக்குமோ, அவ்வாறே கீழான இப் பிறவிகளிலிருந்து மீள வழிதெரியாமல், ஆயினும் அதே ஓர் உயிர் சக்தியில் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும்.

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment