Methods of Raja Yoga:

 
#பூரகம்: மூச்சை உள்ளிழுத்தல்; #ரேசகம்: மூச்சை வெளியேற்றுதல். #கும்பகம்: மூச்சை உள்ளிழுத்து அடக்குதல்.

 ஒவ்வொரு மூச்சுக்கும் ஒரு ஒலி உண்டு. ‘பூரகம், ரேசகம், கும்பகத்தை’ அவ்வொலிகளின் மூலம் ஒருங்கிணைத்து, பயிற்சி செய்யும் போது, பிராணன்கள் அவ்வொலிகளிலும், ஒலிகள் அசையாத ஜோதியிலும் ஒடுங்குகின்றன.

 “அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்

வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே”

அருட்பெருஞ்ஜோதி அகவல் (1315)

 ‘அகரம்’ என்பது எட்டு என்னும் எண்ணின் குறி;

‘உகரம்’ என்பது இரண்டு என்னும் எண்ணின் குறி;

 பகவத்கீதை: அத்தியாயம் ஏழில்,

7.4. “நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அஹங்காரம் இப்படி எட்டுவிதமாக என் பிரகிருதி பிரிவுபட்டிருக்கிறது.”

7.5. “இந்த எட்டு மூலக்கூறுகள் கொண்ட என்னுடைய உடம்பு கீழான பிரகிருதி. இதினின்று வேறானதும், வெளி,உள் என்னும் இரண்டு உயிர்மூச்சு ஆவதும் ஆகிய என்னுடைய மேலான பிரகிருதியை அறிவாயாக. இந்த உடலானது இவ்விரண்டு உயிர்மூச்சுக்களால் தாங்கப்படுகிறது.” என்று சொல்லப்பட்டுள்ளது.

 அதாவது ஒவ்வொரு மனித உருவமும் இந்த எட்டுவிதமான மூலக்கூறுகள் கொண்ட கலவையால், பூரகம்: என்ற மூச்சை உள்ளிழுக்கும் செயலில் எழுகின்ற ‘அகரம்’ என்னும் மந்திர ஒலியால் ஒவ்வொரு முறையும் வடிவமைக்கப் படுகின்றது. எவ்வாறெனில் ஒரு முறை இப் பூரகம் இயங்காவிட்டால், இந்த எட்டுவித கலவைகளால் ஆன தேகம் சிதைந்து போய்விடும்.

 அது போன்றே : ரேசகம்: என்ற மூச்சை வெளியேற்றும் செயலில் எழுகின்ற ‘உகரம்’ என்னும் மந்திர ஒலியால் ஒவ்வொரு முறையும் இந்த உடலானது தாங்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

 அழியாச் சிகரமும்:

‘சி’ என்பது ஓர் உயிர்மெய்யெழுத்து. இது ‘சிவம்’  என்று பொருள் கொண்டது. ‘எட்டு இரண்டன’ இருக்கும் பூரகம் மற்றும் ரேசகம், கும்பகம்: என்னும் மூச்சை உள்ளிழுத்து அடக்கும் செயலோடு இணையும் போது எழுகின்ற ‘சிகரம்’ என்னும் மந்திர ஒலியால் வெளிப்படும் சிவத்தில், வாசி என்னும் இப் பிராணன்களும், இத் தேகமும் ஒடுங்க…

 வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே:

‘வ’ என்பது ஓர் உயிர்மெய்யெழுத்து. இது நான்கில் ஒரு பங்காக இருக்கும் ‘கால்’ எனும் அளவை குறிக்கின்றது. பலவின்பால் விகுதியில் ஒன்று. ‘விழிப்பு, கனவு, உறக்கம், துரியம்’ என்று நான்கு பங்காக விளங்கிக் கொண்டிருக்கும் மனித நிலைகளில், ‘வகரம்’ என்பது நான்கில் ஒன்றான துரியத்தை குறிக்கும் மந்திர ஒலியாகும்.

 ‘அகரம், உகரம், சிகரம்’ என்னும் இம்மூன்று மந்திர ஒலிகளுக்கும் ‘மாத்திரை’ என்னும் கால அளவு உண்டு. ‘வகரம்’ என்னும் மந்திரஒலி ‘மாத்திரைகளே’ இல்லாதது. அதாவது அது கால அளவுகளை கடந்து, ‘வாய்மை’ என்னும் உணர்வாகவே இருக்கும் அருட்பெருஞ்ஜோதி எனும் மகா மந்திரம் ஆகும். அஃதினில், அச் ஜோதியில், வகரத்தில் , ‘அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்’ ஒடுங்கி, பலவின்பாலாக, எங்கும் வியாபித்த தகுதியாக ஆகிவிடும்.

“எட்டிரண்டு அறிவித்து எனைத்தனி ஏற்றிப்

பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே”(1131)

திருச்சிற்றம்பலம் 🙏

Leave a comment