
We make plans, unaware of what is being planned, and what we plan cannot withstand what God plans.- Rumi Quotes
பொதுவாக திட்டமிடுதல் என்பது அடுத்ததாகவோ அல்லது எதிர்காலத்திலோ செயல்படுத்தக்கூடிய ஒரு செயல்முறை என்பதே இதன் பொருளாக, அதாவது திட்டமிடுதல், செயல்பாடு, மற்றும் அதன் பலன்கள் என்ற இம்மூன்றையும் ஒன்றுபட்ட பொருளாகவே, அனைவரும் பொதுவாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர்.
அவ்வாறு எண்ணியபடி பலன்கள் கிடைக்கும்போது, தமது திட்டமிடுதலை பற்றி தமக்குத் தாமே பெருமை பட்டுக் கொள்வதும், அதற்கு எதிர் மறையான பலன்கள் கிட்டும் போது மட்டும் இறைவனை நொந்து கொள்வதும், ஒரு வழக்கமாகவும் கொண்டிருக்கின்றனர்.
வாஸ்துவத்தில் ஒவ்வொரு மனிதர்களாலும் அனுபவிக்கப்படும் பலன்கள் யாவுமே, இறைவனால் முன்பே திட்டமிட்டு வகுக்கப்பட்டுள்ளது. அந்தந்த பலன்களுக்கு உரிய காலகட்டங்கள் என்று வரும்போது, அதை செயல்படுத்த, செய்பவரின் சிந்தனையில், இறைவனால் ‘திட்டம்’ என்னும் எண்ணமாக உதயமாகிறது.
இதை உணர்ந்த பகவான் ரமண மகரிஷி போன்ற ஞானிகள்,
‘அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆதலின் மெளனமாயிருக்கை நன்று.’ என்று,
அதாவது எல்லாம் ‘அவன் செயலே’, தாம் இறைவனின் கைகளில் வெறும் கருவி மட்டுமே என்பதை உணர்ந்து கொண்டு, திட்டமிடல் மற்றும் செயல்களின் பலனைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லாமல், தங்கள் செயலில் அமைதியாக இருந்து, “பிறவிப் பெருங்கடல் நீந்தி இறைவனடி சேர்வார்கள்”.
ஆனால் இதை உணராத அறிவிலிகள், இறைவனால் முன்பே திட்டமிடப்பட்ட செயல்களுக்கு தாம் இறக்கும் வரையிலும், மேலும் தாம் இறந்த பின்பு கூட நிகழக்கூடிய சம்பவங்களுக்கும் சேர்த்து, இறைவனால் முன்னரே நிர்ணயிக்கப்பட்ட திட்டங்கள் மீதே தம்முடைய எண்ணங்களையும் திட்டங்களாக அதனுள் மீண்டும் மீண்டும் உட்புகுத்திக் கொண்டு…
அத் திட்டங்களில், எண்ணிய படி பலன்கள் கிடைக்கும் போது தம்மைதாமே பெருமை படுத்திக் கொண்டும், எதிர்மறையான பலன்கள் உருவாகும் போது, இறைவனை நொந்து கொண்டு, அதன் மூலம் தம்மைதாமே சிறுமைப்படுத்திக் கொண்டும்…
“பிறவிப் பெருங்கடல் நீந்தார் ஆகி இறைவன் அடிசேரா தார்”.
வாழ்க வள்ளுவம் 🙏 வாழ்க தமிழ் 🙏

