“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு”.

எந்த ஒரு பொருளும் அதன் தன்மையுடன் இணைந்தே இருக்கும், அதாவது நெருப்பும் உஷ்ணமும் போன்று பாலும் அதன் வெண்மையும் போன்று.
எனினும் எப்பொருள் ஆயினும் அதன் தன்மை வெளிப்பட வேண்டுமெனில் அப்பொருளோடு மெய்யானது இணைந்து மெய்ப்பொருளாக மாற வேண்டும். மெய் என்னும் பதத்திற்கு ‘உண்மை, உடம்பு, உயிர், உணர்ச்சி’ என்று பல பொருள்கள் உள்ளன.
அதாவது நெருப்பு என்னும் பொருளுடன் மெய் என்னும் இவ்வுடம்பு இணையும் போதுதான், அதன் தன்மையான உஷ்ணம் உணர்ச்சியாக இவ்வுடம்பின் வழியாக அறியப்படுகிறது. அது போன்றே பாலுடன் இம்மெய் கலக்கும் போது தான் அதன் தன்மையான வெண்மை கண்கள் வழியே அறியப்படுகிறது.
அது போன்று யார்யார் வாய் வழியாக எப்பொருள் பற்றிக் கேட்பினும், அப்பொருளானது கேட்பவர் ‘தம்மெய்யுடன்’ பொருந்தினால் தான் அதன் உண்மை தன்மை கண்டறியப்படும். அவ்வாறு கேட்பவர் ‘தம்மெய்யுடன்’ பொருந்தவில்லை எனில், அப்பொருள் எதுவாயினும் அது பொருளற்றதாக போய்விடும்.
“உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன்”
என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லியபடி,
ஒவ்வொரு மானுட உடம்பிலும் பிராணன் என்னும் உயிர் மூச்சாக இயங்கிக் கொண்டிருப்பதும் ஓர் உறுபொருள்தான். இப்பொருளுடன் உணர்வு பூர்வமாக மெய் இணைந்து மெய்ப்பொருளாக ஆனால்தான் உயிர் மூச்சின் உண்மைத் தன்மை வெளிப்படுவதை கண்டறியலாம். அஃதின்றி இவ்வுடம்பினுள் உறுபொருளாக இருக்கும் உயிர் மூச்சை பற்றிய மெய்யறிவு இல்லாது போனால், உயிர் மூச்சானது பொருளற்றதாகி போய் இம்மெய்யை விட்டு விலக, இம்மெய்யும் பொய்யாகி இல்லாமல் போய்விடுகிறது.
வாழ்க வள்ளுவம் 🙏 வாழ்க தமிழ் 🙏

