“சும்மா இரு சொல் அற” அருணகிரிநாதருக்கு முருகப்பெருமானால் அருளப்பட்ட உபதேசம்.

‘சும்மா இரு’ என்பது ஒரு பொருளின் தன்மையாகும். அதாவது ‘வெப்பம்’ என்னும் தன்மைக்கு எவ்வாறு ‘நெருப்பு’ என்பது பொருளாகிறதோ, ‘வெண்மை’ என்னும் தன்மைக்கு ‘பால்’ என்பது பொருளாகிறதோ, அதுபோன்றே ‘சும்மா இரு’ என்னும் இத்தெய்வீக தன்மைக்கு ‘சொல் அற’ என்பதும் ‘மெய்ப்பொருள்’ ஆகிறது.
‘அற’ என்பதற்கு ‘முழுவதும்’ என்று ஒரு பொருள் உள்ளது. அதாவது நீக்கமற எங்கும் நிறைந்த ஓர் தன்மையை சுட்டிக் காண்பிக்க ‘முழுவதும்’ என்ற ‘அற’ என்னும் இப்பதம் பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறு நீக்கமற எங்கும் நிறைந்த ஓர் தன்மையாக இருந்து கொண்டிருப்பது ‘இறைவன்’ ஒருவனேயாம்!
இத்தகைய ‘அற’ என்னும் ‘முழுமையான’ எங்கும் நிறைந்து ‘இருக்கிறார் இறைவன்’ என்னும் ‘சொல்’ ஒருவரால் இடைவிடாது உச்சரிக்கப் பட்டால்?
இடைவிடாது என்னும் ‘அற சொல்’ ஒருவரது நாவின் வழியே உச்சரிக்கப்படும் போது உறக்க நிலை என்று வரும்போது இவ் ‘அற சொல்’ தடைப்பட்டுப் போகும். மாறாக இவ் ‘அற சொல்’ லை ஒருவர் ‘தம் குரு’ மூலமாக,‘ தம் நாசியின்’ வழியாக, தம் உயிர் மூச்சாகவே உச்சரிக்க கற்றுக் கொண்டால்…அஃது விழிப்பு உறக்கம் என்னும் இரு நிலைகளிலும் தடையில்லாமல் இடைவிடாது இயங்கும்.
இத்தகைய இயக்கம் ஒருவரின் ‘மெய்ப்பொருளாக’ ஆகும்போது அதன் தன்மையான ‘சும்மா இருத்தல்’ என்பது இயல்பாகவே சித்திக்கும். அதாவது மெய், வாய், கண், காது, மூக்கு எனும் பஞ்ச இந்திரியங்களின் ஆர்ப்பாட்டம் அடங்க, அலைபாயும் மனமும் அடங்க, அறிவை அறியும் திறனும் மறைந்த அந்நிலையே ‘சும்மா இரு’ என்னும் தெய்வீக தன்மையாகும். அத்தன்மையில்…
“உருவாய் அருவாய், உளதாய் இலதாய்
மருவாய் மலராய், மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க், கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய், அருள்வாய் குகனே”.
என்று திரு அருணகிரிநாதர் தம் கந்தர் அநுபூதியில் அருளியபடி, குகன் என்னும் முருகப்பெருமான் குருவாய் வந்து அருள் புரிவான்.
ஓம் சரவணபவாய நம 🙏

