
திருமூலர் திருமந்திரம்: 2125
“இரதம் உதிரம் இறைச்சிதோல் மேதை
மருவிய அத்தி வழும்பொடு மச்சை
பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி
உருவ மலால்உடல் ஒன்றென லாமே”.
இரத்தம், தோல், சதை, உடலில் இருக்கும் ரசம்,
எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் என உறுப்புக்களை தனித்தனியே கூறினாலும் அனைத்தும் ‘உடல்’ என்னும் ஓர் பெயரில் இணைந்தது விடுகிறது.
திருமூலர் உவமேய பொருளாக இருக்கும் ‘பரம்பொருளை’ பற்றி விளக்கவே உவமானப் பொருளாகவே இப்பாடலை இயற்றியுள்ளார்.
“வெட்ட வெளி தன்னை
மெய்யென்(று) இருப்போர்க்குப்
பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
பட்டயம் ஏதுக்கடி”
என்பது குதம்பை சித்தரின் பாடல்.
‘மெய்’ என்னும் சொல் உண்மை, உடம்பு, என்னும் இரண்டு பொருள்களைக் குறிப்பது. அதாவது உண்மையாக இருக்கும் பரம்பொருளுக்கு ‘உடம்பு’ என்பது ஏதுமில்லாத ‘வெட்ட வெளியே’ ஆகும். அதாவது அந்தப் பரம்பொருளுக்கு உருவமாக வழிபட பல பெயர்களும்,
அருவமாக வழிபட பல பெயர்களும், உருஅருவாக வழிபட பல பெயர்களும் இம் மானுட வர்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தாலும்… அப்பரம்பொருள் உண்மையாக ‘வெட்டவெளி’ எனும் மெய்யாகவே (உடம்பாகவே) இருந்து கொண்டிருக்கிறது.
அதாவது இரத்தம், தோல், சதை, உடலில் இருக்கும் ரசம், எலும்பு, எலும்பு மஜ்ஜை, சுக்லம் என பல தனித்தனி உறுப்புக்களாக இம்மானுட வடிவை சுட்டி காண்பித்தாலும், அவைகள் உண்மையில் எவ்வாறு மனித உடம்பாகவே இருந்து கொண்டிருக்கிறதோ, அவ்வாறே இப்பரம்பொருள் உருவமாக, அருவமாக, உருஅருவாக பல பெயர்களாக, இம் மனித குலத்தால் சுட்டி காண்பிக்கப்பட்டாலும், உண்மையில் அப்பரம்பொருள் ‘வெட்டவெளி’ எனும் மெய்யாகவே இருந்து கொண்டிருக்கிறது.
இஃதினை விளக்கவே உவமானப் பொருளாக இப்பாடலை திருமூலர் கையாண்டு உள்ளார். மேலும் ஒவ்வொரு மானுட உடம்பும், தாம் ‘வெட்ட வெளி’ எனும் இம்- மெய்யாலேயே உருவாக்கப்பட்டும், தாங்கப்பட்டும் கொண்டிருப்பதை உணரும் போது…
உவமானப் பொருளும் உவமேயப் பொருளும் ஒன்றாகி நிற்க, மானுடப் பிறப்பில் “இம்-மெய் பொருளாவதை காணலாம்! அதன் பின், இம்மனித குலத்தில் ஒவ்வொருவரும் தாம் ‘இந்த ஜாதி இந்த மதம்’ என்று ‘பட்டயம்’ போட்டு, தங்களை தாங்களே கூறிக் கொண்டிருக்கும் முறைகள் யாவும் முற்றிலும் அழிந்து போகும்.
திருச்சிற்றம்பலம் 🙏

