மனிதர்கள் தங்கள் உடம்பை, தங்கள் ஆன்மாவில் கரைக்க முடியுமா?

 “உருவமும் அருவமும் உபயமும் ஆகிய
அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல்(317)

உருவம்’ என்பது நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு பூதங்களின் தன்மையால் ஆனது, அது அசைவுள்ளது.

அருவம்’ என்பது ஆன்மாவின் உண்மையான சித்-ஆகாசம் எனும் வெட்ட வெளி நிலை, அது உள்ளும் புறமும் நிறைந்தது மற்றும் அசையாதது,

உருவ நிலையில்’ சதா அசைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மானுட வர்க்கமும், ஆன்மாவின் இத்தகைய ஓர் வடிவமற்ற, அசைவற்ற, ‘வெட்ட வெளி நிலையை’ இறைவனாகவும், குருவாகவும் தம் அகத்திலும், புறத்திலும் முறையாக உணர்ந்து கொண்டு, இடைவிடாது எக்கணமும் தொடர்ந்து வழிபட்டால்?

‘வெட்ட வெளி’ யின் அசைவற்ற தன்மையில், மனித உடம்பின் கலவையாக இருக்கும் நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகியவற்றின் அசைவுள்ள தன்மைகள் யாவும் மெல்ல மெல்ல கரைந்து போக…

உருவமும் இல்லாமல் அருவமும் இல்லாமல் உபயமாக, அதாவது அசைவு, அசையாமை என்னும் இவ்விரண்டு தன்மைகளுக்கும் அப்பாற்பட்ட உபயத்தின் தன்மையாக, ஒளிர்ந்து கொண்டிருக்கும் அருட்பெருஞ்ஜோதியில், வள்ளல் பெருமான் போன்று இரண்டற கலந்து ஒன்றாகலாம்.

“உயிருள்யாம் எம்முள்உயிர் இவை உணர்ந்தே.   உயிர்நலம்பரவுக என்றுஉரைத்த மெய்சிவமே”   

அருட்பெருஞ்ஜோதி அகவல்:487.

இத்தகைய பெறுதற்கரிய பேறு இம்மானுடப் பிறப்பிற்கு மட்டுமே கிட்டியிருக்க, ஒவ்வொரும் தாம் இறந்த பின்னர் எரியூட்டப்பட்ட தம் உடம்பின் சாம்பல் புனித நீர்களில் கலக்கப் பட்டால் விடுதலை பேறு கிட்டும் என்று எண்ணுவதும் அல்லது அவர்களுடைய வாரிசுகள் அவர்களின் பொருட்டு புனித நீர்நிலைகளில் செய்யும் திதி போன்றவைகள் மூலம் தங்களுக்கு நற்கதி கிட்டும் என்றும் எண்ணிக்கொண்டிருப்பது விந்தையிலும் விந்தை!

திருமூலரும் தம் திருமந்திரத்தில் இவர்களை குறித்தே இப்பாடலை இயற்றினார் போலும்.

பெறுதற் கரிய பிறவியைப் பெற்றும்
பெறுதற் கரிய பிரானடி பேணார்
பெறுதற் கரிய பிராணிகள் எல்லாம்
பெறுதற் கரியதோர் பேறிழந் தாரே.

திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

Leave a comment