“துரியம் கடந்த இத்தொண்டர்க்குச் சாக்கிரம்
துரியமாய் நின்றது என்று உந்தீபற
துறந்தார் அவர்கள் என்று உந்தீபற“.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்
அருளிய திரு உந்தியார். பாடல் 32.
–ஆன்மாவானது கருவி கரணங்களுடன் விழிப்பு, கனவு, உறக்கம், துரியம், துரியாதீதம் எனும் ஐந்து அறிநிலை அவத்தைகளினூடாகச் செல்கின்றது.
–இதில் ‘விழிப்பு‘ என்பது ‘இருக்கிறேன்‘ என்று தனது உடலின் இருப்பை அறியும் நிலை.
-‘உறக்கம்‘ என்பது ‘இல்லை‘ என்று தனது இருப்பை முற்றிலும் அறியாத நிலை. அதாவது தம் உடம்பை பற்றிய உணர்வே அற்றுபோன நிலை.
-‘துரியம்‘ என்பது ‘இருக்கு மற்றும் இல்லை‘ எனும் இருவித உணர்வுகளையும் கடந்த நிலை. அதாவது அறிந்த நிலை, அறியாத நிலை இவ்விரண்டுக்கும் அப்பாற்பட்ட நிலை.
-‘துரியாதீதம்‘ என்பது ‘ஆம் என்றும் இல்லை‘ என்றும் இல்லாமல் ‘ஆம்‘ என்றே இருக்கும் நிலை. அதாவது ‘துரியமும்‘ கடந்த நிலையில் ‘சாக்கிரம் அல்லது விழிப்பு‘ நிலையில் வெளிப்படும் ‘இருக்கிறேன்‘ என்ற உணர்வோடு இரண்டறக் கலந்து நிற்பதே ‘ஆம்‘ என்றே இருப்பதாகும்.
“துரியமும் கடந்த சுக பூரணம்தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி“
அருட்பெருஞ்ஜோதி (அகவல்: 65)
‘துரியம்‘ கடந்த அந்நிலையில் ‘சாக்கிரம்‘ துரியமாக, அதாவது ‘துரியாதீதம்‘ என்னும் அந்நிலைக்கு துணையாக… அருட்பெருஞ்ஜோதியின் பேராற்றல் நின்றால் தான்?
–காற்றின் தன்மையால் கற்பூரத்தின் உருவம் முழுவதும் கரைந்து மறைந்தே போய்விடுவது போன்று… அருட்பெருஞ்ஜோதியின் பிரகாசத்தால் இவ் அணுக்கத் தொண்டர்கள் தம் உருவம் முழுவதையும் சிவ ஜோதியில் துறந்து பரிபூரண சுகத்தை எய்துவார்கள்!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


