
“உன்னும் அளவில் உணரும் ஒருவனைப்
பன்னு மறைகள் பயிலும் பரமனை
என்னுள் இருக்கும் இளையா விளக்கினை
அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே.”
திருமூலரின் திருமந்திரம்:2005
ஒவ்வொருவரும் உண்ணக்கூடிய உணவு வகைகள் என்பது காற்று, நீர் மற்றும் திட உணவு போன்றவைகள் ஆகும். இவற்றுள் முதன்மையான உணவு வகை என்பது பிராண வாயுவை உள்ளடக்கிய காற்றே ஆகும்
தைத்திரீயோபநிஷத்து :பிருகுவல்லீ
பிராணனும் சரீரமும் அன்னமும் அன்னாதமும் (எது உண்கின்றதோ அது அன்னாதம் எது
உண்ணப்படுகிறதோ அது அன்னம்) ஆகின்றன. பிராணனிடம் சரீரம் ஒடுங்கி நிற்கும். சரீரத்தில் பிராணன் ஒடுங்கி நிற்கும்.இவ்வாறாக அன்னம் அன்னத்தில் ஒடுங்கி நிற்கின்றது. எவன் இங்ஙனம் அன்னம் அன்னத்தில் நிலைபெறுவதை அறிகின்றானோ அவன் நிலையான பதவியை எய்துகிறான்.
ஆக வேத மறைகள் போற்றும் பிராணநே (காற்றே) ஒவ்வொருவரின் சரீரத்திற்கும் முதன்மையான உணவாக ஆகின்றது. திருமூலரின் திருமந்திரமும் இவ்வாறே பிராணனை ‘உணரும் உணவாக’ போற்றுகிறது. அதாவது சரீரத்தின் உணர்வாக பிராணன் என்னும் உணவு இடைவிடாது உண்ணப்பட்டுக் கொண்டிருந்தால்தான் சரீரம் சிவமாய் இருக்கும், இல்லையெனில் அது சவமே!
அவ்வாறு சிவஜோதியாய் ஒவ்வொரு சரீரத்திற்கும், இளையா:தலைக் காவலாய் இருக்கும் விளக்கினை,
“அன்ன மயமென்று அறிந்துகொண் டேனே “
தைத்திரீயோபநிஷத்து :பிருகுவல்லீ
உணவும் நானே, உண்பவனும் நானே, உணவுக்கும் உண்பவனுக்கும் உள்ள உறவை (பஞ்சாட்சர மந்திரத்தை) உண்டாக்கியவனும் நானே!
எவன் இங்ஙனம் அறிந்து அன்னரூபியான என்னை (பிராணனை) கொடுக்கின்றானோ அவன் இதனால் ஆத்ம ரஷனம் செய்தவன் ஆகிறான். இங்ஙனம் அறிந்து கொடுக்காவிட்டால் உண்பவனையே(சரீரத்தை)
உணவாகிய நான் (பிராணன்) உண்டுவிடுகிறேன்.
அதாவது உணவாகிய பிராணனும் சிவமே, உண்பவனாகிய சரீரமும் சிவமே, பிராணனுக்கும் சரீரத்திற்கும் இடையில் உள்ள உறவும் சிவமே என்று அறிந்து கொண்டு உண்டால் எல்லாம் சிவமயமாகும் என்கிறது திருமூலரின் திருமந்திரச் சொல்!
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

