மெய்த்தவம்:மெய்த்தாள்:மெய்த்தவம்:மெய்த்தாள்:மெய்ந்நெறி
“ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்” :குறள் 484
பொதுவாக ஒருவர் பரபரப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில், அத்தகையவரை எவரேனும் ஒருவர் அணுகினால், அவரிடமிருந்து வெளிப்படும் வார்த்தை ‘எனக்கு நேரமே இல்லை அல்லது நேரம் எனக்கு போதாது‘ என்றே! உண்மையில் ‘நேரம்‘ என்பது மனதின் வெறும் கற்பனையே அன்றி வேறல்ல. வள்ளுவர் பெருமான் இக்குறளில் குறிப்பிட்டுள்ள ‘காலம்‘ என்பது நேரம் அற்றது. அதாவது நேரத்தை குறிக்கும் பகல், இரவு, வாரங்கள், மாதங்கள், வருடங்கள், பருவ காலங்கள், இருக்கு மற்றும் இல்லை போன்றவைகளுக்கு அப்பாற்பட்டது. வள்ளுவர் குறிப்பிடும் ‘காலம்‘ என்பது ‘ஞாலம்‘ கருதுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
‘ஞாலம்‘ என்பதற்கு ‘உலகம்‘ என்று பொருள்கொண்டால், உலகம் என்பது ‘நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்‘ என்னும் இவ்வைந்தையும் உள்ளடக்கிய பஞ்சபூதங்களில் கலவையை அன்றி வேறல்ல. இறைவனும் கூட பஞ்சபூத அம்சமாகவே இருப்பதாக ஐதீகம். மேலும் ஒவ்வொரு மானுடவடிவின் மூலம்கூட இப்பஞ்சபூதங்களின் கலவையே அன்றி வேறல்ல! ‘மெய்‘ என்பதற்கு ‘உண்மை மற்றும் உடம்பு‘ என்று இரு பொருள்கள் உள்ளன. “தன்னை அறிய தனக்கொரு கேடு இல்லை” என்பது திருமூலரின் திருமந்திரச்சொல். அதாவது ‘ஞாலம்‘ என்னும் மெய்யாகிய சிவமாகிய தன்னை அறிய முயல்பவர்களுக்கு மட்டுமே ‘காலம்‘ எனும் இச்சொல்லும் பொருந்தி கட்டுப்படும்.
“மேற்கொள்ள லாவதோர் மெய்த்தவம் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்த்தாளும் ஒன்றுண்டு
மேற்கொள்ள லாவதோர் மெய்ந்நெறி ஒன்றுண்டு
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டி நின்றோர்க்கே”.
என்பது திருமூலர் திருமந்திரம் : 2113
மேற்கொள்ள லாவதோர்: பஞ்சபூத அம்சமான ‘மானுடர் யாக்கை வடிவு சிவலிங்கம்’ என்று திருமந்திரத்தில் சொல்லியபடி, தம் தேகமாகவே விளங்கும் ஞாலமாகிய இறைவனை தமக்கு புறம்பாக எண்ணி புற வழிபாட்டை மேற்கொள்ளாதவர்…
அத்தகையோர் மேற்கொள்ளும் மெய்த்தவம் ஒன்றுண்டு: அதாவது தம் உருவையே பஞ்சபூத கலவையின் சிவ–வடிவாக, மெய்யுருவாக எண்ணி இத்தகையோர் மேற்கொள்ளும் தவமே மெய்த்தவம் என்று பொருள் கொள்ளலாம்.
மெய்த்தாளும் ஒன்றுண்டு: ‘திருவடியே சிவமாவது தேரில்’ என்பதும் திருமூலரின் திருமந்திரச் சொல். ‘தேரி’ என்பதற்கு மணல்குன்று என்று பொருள் உள்ளது. ஒவ்வொரு மானுட தேகமும் மண்ணினால் ஆன மணல் குன்றே ஆகும். அதில் மெய்த்தவம் மேற்க்கொள்ளும் போது, அம்– மெய்யானது சிவமாகவே விளங்கும் தாள்கள் என்னும் திருவடிகளால், திருவாசிகளால் (மூச்சால்) ஆளப்படும். ‘மெய்த்தாளும்’ என்பதற்கு இவ்வாறு பொருள் கொள்ளலாம்.
மெய்ந்நெறி ஒன்றுண்டு: ‘உடல் உயிர் உண்மை என்று ஓர்ந்து கொள்ளாதார்’ என்பதும் கூட திருமூலரின் திருமந்திரச் சொல்தான். அதாவது உடல் என்னும் மெய் எழுத்தையும், உயிர் எழுத்தையும் முறையாக இணைத்து உயிர்மெய் எழுத்தாக ஆக்கும் முறையே மெய்நெறி ஆகும்.
மேற்கொள்ள லாம்வண்ணம் வேண்டி நின்றோர்க்கே:
தம் மெய்க்கு புறம்பாக அந்நியமாக சிவத்தை(ஞாலத்தை) கருதி புறவழிபாட்டை மேற்கொள்ளாமல் வேண்டி நின்றவர்களுக்குத்தான், இத்தகைய மெய்நெறியும் மெய்தாள்களும் கொண்ட மெய்தவத்தை மேற்கொள்ள இயலும்.
மேலும் இத்தகையோரின் செயல்பாட்டினை மிகவும் கூர்ந்து கவனித்தால் அங்கு மனதின் கற்பனையான ‘நேரம்‘ என்பது இருக்காது. இவ்வாறு ஒருவர் தன்னை (ஞாலம்) அறிய, நேரமற்ற காலத்தை மட்டுமே தம்கருத்தில் கொண்டு செயல்படும் போது தான், அச்–செயல்பாட்டிற்குரிய இடமானது ‘வெட்ட வெளியாய்‘ வெளிப்பட்டு… “வெட்டவெளிதனை மெய் என்றிருப்பாருக்கு பட்டயமேதுக்கடி குதும்பாய்” என்று குதும்பை சித்தர் பாடியுள்ளபடி, பட்டயம் இல்லாத ‘ஞாலத்தை‘ அச் செயல்பாட்டின் பலனாக அளித்துவிடும்!
அஃதின்றி மனதின் அசைவான நேரத்தோடு மட்டுமே இசைந்து போகிறவர்கள், பரபரப்பான காலசூழ்நிலைகள் மாறி வெறுமையான நேரத்துடன் கூடிய காலம் வரும்போது, இத்தகையோரிடமிருந்து முன்பு வெளிப்பட்ட வார்த்தைகளான ‘எனக்கு நேரமே இல்லை, நேரம் எனக்கு போதாது‘ என்ற சொல் மாறி போய்…ஏதோ நேரத்தை போக்கிக் கொண்டும் கடத்திக் கொண்டும் இருக்கிறேன் என்னும் ஆதங்க வார்த்தைகளே வெளிப்படும்!!
வாழ்க தமிழ்🙏 வாழ்க வள்ளுவம்🙏

.jpeg)
