“வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட
வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே”
திருமூலர் திருமந்திரம்: 52
ஒரு பொருளும் அதன் தன்மையும் வேறுபட்டதல்ல. அதாவது நெருப்பும் அதன் உஷ்ணமும் போல, பாலும் அதன் வெண்மையும் போன்று எப்பொருளும் அதன் தன்மையும் வெவ்வேறு அல்ல. அதேபோன்று வேதத்தின் பொருளாய் இருப்பவன் சிவபெருமான். அப்படியாயின் வேதம் என்பது சிவம் என்னும் அப்பொருளின் தன்மையாக அவனிடமிருந்து வேறுபடாததாக சதா ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதாவது அனாதியான சிவத்தின் மூச்சுக்காற்றாகவே வேதஒலி விளங்கிக் கொண்டிருப்பதால் வேதம் என்பதும் அநாகத ஒலியே!
“வேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்
வேதம் உரைத்தானும் வேதா விளங்கிட”
வேத பொருளான அச்-சிவத்தை உணராது உரைக்கும் வேதம் வேதமாகாது, அவ்வாறு வேதத்தை உரைக்கும் வேதியரும் வேதியர் ஆக மாட்டார்கள்.
“வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்
வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே”
மெய்சிவமே தம்-மெய்யின் பொருளாக இருப்பதை, அதன் தன்மையான வேதத்தின் வழியே ஒருவர் அறிந்து உணர பெற்று ஓதும்போது, அவ்வாறு ஓதுபவரின் வேத ஒலியானது, ஓதுபவரின் மூச்சு காற்றாகவே வெளிப்பட்டு எங்கும் வியாபித்து, அஃது உலகிற்கு நன்மை பயக்கக்கூடியதாக அமைந்துவிடும். இத்தகைய தன்மையினை உணர்ந்து உரைக்கப்படும் வேதமே வேதமாகும், அவ்வாறு இத்-தன்மையின் மெய்ப்பொருளாகவே இருந்து வேதத்தை உரைப்பவர்கள் யாராயினும் அவர்கள வேதியரே ஆவார்கள்!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


