திருமூலரின் திருமந்திரம்: 20
“முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்
கடிமலர்க் குன்றம் மலையது தானே”
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த:
மானுடப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரின் முடிவும் (இறப்பும்) இறந்த அக்கணமே அடுத்த பிறவிக்கு வித்தாய் அமைகிறது. அடுத்த பிறவி என்பது ஒருவர் இறப்பதற்கு முன்பே அம் -மானுட உடம்பில் உயிரானது குடிகொண்டு இருக்கும்போதே உருவாக்கப்படுகிறது!
அதாவது ஒருவன் இறக்கும் தருவாயில் எதை நினைத்துக் கொண்டு உடம்பை விடுகின்றானோ அதுவே அவனது அடுத்த பிறவியாக அமையும் என்பதும், மேலும் ஒருவன் தன் வாழ்நாளில் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கின்றானோ அதுவேதான் அவனது இறுதி நாளின் சிந்தனையாகவும் வந்து நிற்கும் என்பதும், பகவத் கீதையில் அக்ஷரப்ரஹ்ம யோகத்தில் சுலோகம் 6ல் ஸ்ரீ கிருஷ்ணனின் உபதேசமாகும்.
எடுத்துக்காட்டாக: ஒருவன் தன் வாழ்நாளில் தன்னுடைய வளர்ப்பு நாயின் மீதே அதிக கவனம் கொண்டிருந்தால் அந்-நாயின் வடிவே அவனது அடுத்த பிறவியாக அவனறியாமலேயே அவனுள்ளே படைக்கப்பட்டுவிடும். இறக்கும் தருவாயில் அதுவே அவனது சிந்தனையாகவும் வந்து நிற்கும். இந்த ரகசியம் அம்- மானுட உடம்பில் குடி கொண்டிருக்கும் அவ்-உயிருக்கு, அவ்வுயிரின் வித்தாக அவ்- உடம்பிலேயே குடி கொண்டிருக்கும் ஈசனால் முன்பே அறிவிக்கப்படும். எல்லா ‘உயிரிகளின் வித்து’ எதுவோ அதுவே நான் என்பதும் பகவத் கீதையில் விபூதி யோகத்தில் சுலோகம் 39ல் ஸ்ரீ கிருஷ்ணனின் அருள்வாக்காகும்.
“அடிகள் உறையும் அறன் நெறி நாடில்
இடியும் முழக்கமும் ஈசன் உருவம்”
குருவருளால் ஒவ்வொரு மானுட தேகத்துள்ளும் இடியுடன் கூடிய மின்னல் போன்று, ஒலியுடன் கூடிய ஒளியாக, உயிரின் வித்தாக விளங்கிக் கொண்டிருக்கும் ஈசனின் திருவடிகளை ஒருவர் அறியப் பெற்று அஃதினைப் பற்றி கொண்டால்?
“கடிமலர்க் குன்றம் மலையது தானே”
இவ் உடம்பை விட்டு உயிர் நழுவும் தருணம் “அங்கே உடுக்கை இழந்தவன் கை போல”, ஒலியுடன் கூடிய ஒளியாக, அவ்-உயிரின் வித்தாக விளங்கும் ஈசனின் உருவம் வெளிப்பட்டு…
அவ் உயிரானது உடம்பை விட்டு நழுவி மீண்டும் ஏதோவொரு யாக்கைக்குள் புகாவண்ணம் “இடுக்கண் களைந்து” காத்தருளி அங்கு “நட்புக்கே” இலக்கணமாக ஈசன் விளங்கிக் கொண்டிருப்பார்.
“இன்றிபோக இருவினையும் கெடுத்து
ஒன்றியாக்கைபுகாமை உய்யக்கொள்வான்
நின்ற வேங்கடம் நீள்நிலத்துள்ளது
சென்று தேவர்கள் கைதொழுவார்களே”
என்னும் நம்மாழ்வார் பாசுரமும் இக்கருத்தின் அடிப்படையிலேயே உள்ளது.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
