You Are That- “self-sabotaging”

திருமூலர் திருமந்திரம்:2214

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று

நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு

வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து

பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே.

திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று:

குணங்கள் மூன்று வகைப்படும். அவைகள் ஆசை {ரஜஸ்}, நல்லியல்பு {சத்வம்} மற்றும் இருள் {தமஸ் குணங்கள்} ஆகியவகள் ஆகும். இக் குணங்கள் மூன்றும், மூன்று சிங்கங்களுக்கு ஒப்பாகும். ‘சிவாய நம’ என சிந்திக்காத சிந்தையுள் எவ்வழி செல்வது என்னும் ‘திகைப்பு’ சதா இருந்து கொண்டேதான் இருக்கும். அத்தகைய திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்களுக்கு ஒப்பான இம் மூன்று குணங்களும், எக்கணத்திலும் பாய்ந்து சிந்தையை தம் வசம் ஆக்கிக் கொண்டேயிருக்கும்.
நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு:

‘சிவாய நம’ என சிந்திக்கும் உபாயம் இருந்தும், அவ்வாறு சிந்திக்க இயலாதவாறு செய்து கொண்டிருக்கும் நெஞ்சுள், கள்ளத்தனத்திற்கு ஒப்பான நரிக்குட்டிகள் நான்கு உள்ளன. அவைகள் முறையே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் போன்றவைகள். சிந்தை தெளிவு பெறாதபடி சதா திகைக்கும் படி செய்து, நெஞ்சுள் இருந்து கொண்டு கள்ளத்தனமாக ‘நகைத்துக் கொண்டிருப்பது’ அந்த கரணங்களாகிய இந்த நான்கு நரி குட்டிகளே ஆகும்.
வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து:

அவ்வாறு நகைக்கின்ற நெஞ்சுக்கு தந்திர உபாயமாக இருப்பது ஐந்து வகையான, ஆனைக்கன்றுக்கு ஒப்பான மெய், வாய், கண், காது, மூக்கு எனும் ஐம்புலன்களாகும்.
பகைக்கின்ற நெஞ்சுக்குப் பாலிரண் டாமே:

அறியாமையினால் இவ்வாறு தன்னையே தனக்கு பகையாக ஆக்கிக் கொண்டு வாழும் ‘நெஞ்சுக்கு’ துணையாக இருந்து கொண்டிருப்பது நாசியின் வழியாக இயங்கிக் கொண்டிருக்கும் ‘பிராணன் அபாணன்’ என்னும் இரு வாயுக்களே!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment