“ஆன்மா, அன்பு, சிவம்”

“அன்பு என்றால் என்னவென்று ஆன்மாவிற்கு மட்டுமே தெரியும்.” – என்பது சூபி ஞானி ஹஸ்ரத் ரூமியின் கூற்று. அதாவது ஆன்மாவை பற்றிய ஞானம் இல்லையெனின் உண்மையான அன்பும் வெளிப்படாது.
ஆன்மாவை பற்றிய ஞானம் இல்லாமல் ‘அன்பு’ என்று பஞ்ச இந்திரியங்களான மெய் வாய் கண் காது மூக்கு மனம் புத்தி இவைகளின் வழியாக மட்டுமே வெளிப்பட்டால் அஃது ‘காமமே’ அன்றி உண்மையான அன்பு என கொள்ளலாகாது. இத்தகைய அன்பு அல்லது காமம் என்பது மாறும் இயல்புடையது, அதாவது ஓர் உடம்பை பற்றி மற்றொன்றை விட்டுவிடும் தன்மையும், சக்தி விரயமும் உடையது.
ஆனால் ஆன்மாவை பற்றிய ஞானம் கிட்டிடின் அஃதே அன்பு மயமாகவும்,

சிவ மயமாகவும் இருப்பதை உணர முடியும். எல்லாம் சிவமயமாகவே ஆகிவிட்டபடியால் அங்கு மாற்றம் என்பது நிகழவே நிகழாது. அத்தகைய
அன்பு என்பது பஞ்ச இந்திரியங்களால் பற்றப்படாததாகவும் ஆனால் பஞ்ச இந்திரியங்களின் வழியே மாறாத விரயம் இல்லாத சக்தியாகவும் விளங்கும்.
“அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”

என்பது திருமந்திரம். இவ்வாறு அன்பே சிவமாய் அமர்ந்திருப்போரின்,

பஞ்ச இந்திரியங்களின் வாயிலாக வெளிப்படும் அன்பே தூய அன்பாகும்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment