ஆவன ஆக அழிவ அழிவன
போவன போவ புகுவ புகுவன
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே.
திருமந்திரம்:2175
“ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; மாறாக, அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு வடிவத்திற்கு மாறுகிறது என்பது ஆற்றலின் பொது விதி”.
ஆவன ஆக அழிவ அழிவன:
உயிர் அல்லது ஆத்மா என்பது உருவாக்கப்படவும் இல்லை, அது அழியவும் அழியாது. அது ஆதியும் உதவும் இல்லா அருட்பெருஞ்ஜோதி. ஆகையால் உயிரின் ஆக்கம் அல்லது பிறப்பு என்பதெல்லாம் பிறப்பும் இல்லை, அது போன்று உயிர் அழிவது என்பதெல்லாம் அழிவதும் இல்லை.
போவன போவ புகுவ புகுவன:
ஆகாசம் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கிறது. ஆனால் அது ஒவ்வொரு வடிவத்திற்குள்ளும் பிரிவுபட்டது போன்று தென்படுகிறது. பிரிவுபடுத்துகிற வடிவத்துக்குள்ளும் அது இடையீடின்றி வியாபித்திருக்கிறது. இதுவே சித்தாக்காசம் என்னும் உயிர் சக்தியும் ஆகும். உருவங்களால் இது பிளவு பட்டது போன்று தென்பட்டாலும் இதற்கு போக்கும், வரவும், புகுதலும் இல்லை. இதையே மணிவாசகப் பெருமான் தம் திருவெம்பாவையில்…
“பூதங்கள் தோறும் நின்றாய்! “எனின் அல்லால் “போக்கிலன் வரவிலன்” என்று போற்றிப் பாடியுள்ளார்.
காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன்
ஏவன செய்யும் இலங்கிழை யோனே:
எது ஆகும், எது போகும் என்பதெல்லாம் நம்மால் கண்டறிய முடியாத, நமது சிற்றறிவுக்கு எட்டாத செய்திகள். அறிவுக்கு அறிவாய் விளங்கும் சிவம் காட்டித் தந்தால் இவற்றை நாம் காணலாம்; அவன் அறிவித்தால் நாம் இவற்றை அறியலாம். அவ்வாறு சிவத்தால் காட்டப்பட்டு முழு உண்மையையும் கண்டவர்கள் சிவனருள் பெற்றவர்களே.
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்றவரை கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

.jpeg)
