“பூதமுநாலு சுவாசமும் நின்று” :பட்டினத்தார் பாடல்
பட்டினத்தார் ஒரு ‘மனிதனின் பிறப்புமுதல் இறப்புவரை’ அவ்வப்பொழுது நடக்கும் நிகழ்வுகளை தொகுத்து பாடிய இப்பாடலில் ‘மரணம்’ எவ்வாறு நிகழ்கின்றது என்பதை “பூதமுநாலு சுவாசமும் நின்று” என்னும் வரிகளாக குறிப்பிடுகிறார். ஏனெனில் பஞ்சபூதங்களின் கலவையாலே ஒவ்வொரு மானுட யாக்கையும் உருவாக்கப்படுகின்றது.
பஞ்சபூதங்கள் என்பது ‘நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாசம்’ என்பவைகள். ஆனால் பட்டினத்தார் இங்கு தம் பாடலில் ‘பூதமுநாலு’ என நான்கு வகை பூதங்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். ஏனெனில் நிலம், நீர், காற்று, நெருப்பு என்னும் நாலு பூதங்களின் தன்மைகள் மட்டும்தான் திரிந்து மானுட யாக்கையாக வடிவம் தாங்கி நிற்கின்றன.
‘சுவாசம்’ நின்று, மரணம் நிகழும் போது நாலு பூதங்களின் தன்மைகளும் மறைந்து தம் தம் ஸ்தானங்களுக்கு மீண்டும் சென்று விடும். இஃதில் ஆகாசம் மட்டும்
சித்-ஆகாசமாக, வெட்ட வெளியாய், மாறுபாடு ஏதுமில்லாமல், போக்கும் வரத்துமின்றி, உள்ளும் புறமும் இன்றி, எல்லா உயிரின் வித்தாக, சிவமயமாய் ஒன்றனவே இருந்து கொண்டு இருக்கின்றது. மாணிக்கவாசகர் பெருமானும் தம் பாடலில்,
“பூதங்கள் தோறும் நின்றாய் எனின் அல்லால
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்”
என்று சிவபெருமானை துதித்து பாடியுள்ளார்.
அதாவது பிறப்பும் இறப்புமாக, அங்கும் இங்குமாய், சஞ்சரித்து கொண்டிருக்கும் ‘பூதங்கள் நாலும் சுவாசமும்’ கலந்த கலவையான ‘இம்-மானுட யாக்கைகள்’ யாவுமே நிலைபெற்று இருப்பது, சித்-ஆகாசமாகிய ‘சிதம்பரத்தில்’ தான்! என்னும் மெய்ஞானம் கைவரப்பெற்றால்? ‘பூதமுநாலு சுவாசமும்’ ஆகாசத்தில் அடங்க பெற்று அமரத்துவம் எய்தலாம் என…
இம்- மெய்ஞானம் கைவரப்பெறாமல் பிறப்பும் இறப்புமாக, அங்கும் இங்குமாய், சஞ்சரித்து கொண்டிருக்கும் மானுடப் பிறப்புகளுக்கு எச்சரிக்கையாகவும், அதே சமயம் அதிலிருந்து மீள ஒர் உபாயமாகவும், இரு வேறு பொருள்களை உள்ளடக்கிய இப்பாடல் வரிகளை பட்டினத்தார் நமக்கு அளித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


