You Are That! – “Ever Visible Shivam”

திருமூலரின் திருமந்திரம்: 309

“மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே” .

மரம் சுவாசிப்பதற்கு தேவையான ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. பூமியை வெப்பத்திலிருந்து காத்து குளிர்விக்கின்றது, பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு வாழ்விடமாக, இயற்கை உரமாக, நாம் உண்பதற்கு உதவும் காய், கனி, கீரை போன்றவற்றை தருகின்றன. மண்ணுக்கு பசும் போர்வையாக இருக்கின்றன…

மரத்தை மறைத்தது மாமத யானை:

மேற்கூறிய மரத்தின் தன்மைகள் யாவும் சுட்டும் தன்மை இன்றி, தனியுடைமை பொருளாக கொள்ள இயலாமல், பொதுவில் உணரக்கூடியதாகவே இருக்கின்றது! இருப்பினும்? ஒரு சிற்பியால் மரமானது மாமத யானையாக வடிவமைக்கப்பட்ட பின்பு, அம்-மரத்தின் தன்மைகள் யாவும் மறைந்து, அஃது சுட்டும் தன்மை கொண்டதாக,

பொது உணர்வு மறைய தனியுடைமை பொருளாக மாறிவிடுகின்றது…

பரத்தை மறைத்தன பார்முதல் பூதம்:

பரம்: என்பது ‘நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்’ என்னும் பஞ்ச பூதங்களை உள்ளடக்கிய சிவமே!

பார்: என்பதற்கு ‘நிலம் என்னும் பூதம்’ என்று பொருள் உள்ளது.

அதாவது ‘பரம் என்னும் சிவத்தில்’ நிலம் என்னும் முதல் பூதம் தவிர, மற்ற நான்கு பூதங்களும் மரத்தின் தன்மைகள் போன்று சுட்டும் தன்மை இன்றி, தனியுடைமை பொருளாக கொள்ள இயலாமல், பொதுவில் உணரக்கூடியதாகவே இருக்கின்றது…
பார்(நிலம்) எனும் முதல் பூதத்தால், ‘பரம் எனும் சிவமானது’ வினைப்பயன்களால் மானுட தேகமாக, சுட்டும் தன்மை கொண்டதாக, தனியுடைமை பொருளாக காணப்படும் போது , பரத்தின் மற்ற நான்கு பூதங்களின் தன்மைகள் யாவும் அம்-மானுட வடிவில் மறைந்தது உணர இயலாமல் போகின்றது…
மரத்தில் மறைந்தது மாமத யானை:

சிற்பியால் வடிவமைக்கப்பட்ட மாமத யானை காலத்தால் மூலப்பொருளான மரத்தில் ஒடுங்கும் போது, அம்-மாமத யானைக்குரிய தன்மைகள் யாவும் மறைந்து போக, மூலப்பொருளான மரத்தின் தன்மைகள் மீண்டும் வெளிப்படுகின்றது…
பரத்தில் மறைந்தன பார்முதல் பூதமே:

அவ்வாறே “ஞானத் தீயால்” வினைப் பயன்கள் முழுவதும் எரிந்து சாம்பலாக, தனித்து இயங்க இயலாத ‘நிலம் எனும் பார்முதல் பூதம்’ அதாவது இம்-மானுட தேகம் பரத்தில் மறைந்துபோக, ‘பரம்’ சிவஜோதியாக வெளிப்படும்!!
அஷ்டாவக்ர கீதை: அத்தியாயம் IX.

(பார்முதல்) பூதத் திரிபுகளை (இவ்- உடம்பை) பூதங்களாகவே கண்டால் அக்கணமே நீ உண்மையிற் கட்டறுந்து சொரூப நிலை பெறுவாய்!!!

திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment