திருமூலரின் திருமந்திரம்:143
“மண்ணொன்று கண்டீர் இருவகைப் பாத்திரம்
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
திண்ணென் றிருந்தது தீவினை சேர்ந்தது
விண்ணின்று நீர்விழின் மீண்டுமண் ணானாற்போல் எண்ணின்றி மாந்தர் இறக்கின்ற வாறே” .
ஒவ்வொரு மானுட தேகமும் ‘நல்வினை, தீவினை’ என்னும் இவ்விரண்டு வினைகளை அனுபவிப்பதற்காகவே பஞ்சபூதங்களில் ஒன்றான மண்ணினால் வடிவமைக்கப் படுகின்றது. இவற்றுள் நல்வினையை அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்படும் உடம்பு, அப்-பாத்திரம் உருவாக காரணமாக விளங்கும் ‘ஞானம்’ கொண்ட அவனின் பெற்றோர்களால் நன்கு தீயிலிட்டுச் சுடப்பட்ட பாத்திரமாகவே, அதாவது ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்னும் பழமொழிக்கு ஏற்பவே வெளிப்படும்.
மாறாக தீவினையை அனுபவிப்பதற்காக வடிவமைக்கப்படும் உடம்பு, பாத்திரத்தை திறம்பட உருவாக்கும் ‘ஞானத்தை’ அடையப் பெறாத பெற்றோர்கள் மூலம் சுடப்படாத பாத்திரமாகவே திண்ணென் றிருந்து , அதாவது ‘கெடுவான், கேடு நினைப்பான்’ என்னும் பழமொழிக்கு ஏற்பவே வெளிப்படும்.
இவ்விரண்டு பாண்டங்கள் ஒரேவகை மண்ணாலே செய்யப்பட்டனவாயினும், இவற்றின்மேல் வானத்தி னின்று ‘அருள்மழை’ விழும்போது…
சுடப்பட்டது இறையருளுக்கு பாத்திரமாகி பிறவிப்பிணி எனும் கேடின்றி நிற்க…
சுடப் படாதது கெட்டு அதாவது…
“அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்
மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே”
என்று வள்ளல் பெருமான் தம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பாடியுள்ள படி…
‘இறையருளை’ உணர இயலாத ‘மருள் அறிவு’ கொண்டவராக, பிறவிப்பிணி என்னும் கேட்டிலிருந்து விடுபட முடியாமல் முன்போலவே (இறந்து) மண்ணாகி, மனிதப் பிறவி இல்லாத வேறு வகையான மண் பாத்திரங்களாக மீண்டும் மீண்டும், மாறி மாறி வடிவமைக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள்!
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

.jpeg)
