You Are That! – “Silent talker”

“சொல்லும் இடம் அன்று; சொல்லப் புகும் இடம்
எல்லை சிவனுக்கு என்று உந்தீபற
என்றால் நாம் என் செய்கோம் உந்தீபற”.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்
அருளிய திரு உந்தியார். பாடல் 29

சொல்லும் இடம் அன்று; –
சிவபெருமானின் வாசஸ்தலம் என்பது நாவின் அசைவின் வழியே உண்டாகும் சொல்லினால், அங்கு உள்ளான், இங்கு உள்ளான் என்று சுட்டிக் காண்பிக்கும் இடங்களில் அன்று;
“சுட்டுதற் கரிதாஞ் சுகாதீத வெளியெனும்
அட்டமேற் சிற்சபை யருட்பெருஞ் ஜோதி”
சொல்லப் புகும் இடம்;-
சொல் உட்புகும் இடம், அதாவது நாவின் அசைவின் வழியே உண்டாகும் சொல், சொல்பவனின் உட்புக முடியாது. நாவடக்கி! வாசியின் வழியாக சொல்லும் சொல்லானது சொல்பவனின் உட்புகும். அந்த இடமே சிவனுக்கு எல்லையாகும்.
“என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடைய அன்பே”
“என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடைய அன்பே”
(அகவல்:1481-1484)
என்றால் நாம் என் செய்கோம்;-
சிவனின் எல்லை கண்டபின் அங்கு ‘சொல் சொல்லப்படும் பொருள் சொல்பவன்’ எனும் மூன்றின் தன்மைகளும் மறைந்து விடுவதால்… செயலற்ற அந்நிலையில் ‘சிவம் சிவனே’ என்று இருக்கும்.
“ஒன்றென இரண்டென ஒன்றிரண்டென இவை
அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:21)
திருக்குறள்: 127
“யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப்

பட்டு “
யாகாவா ராயினும் நாகாக்க:-
யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும் நாவைக் காத்து (அடக்கி), வாசியினால் ‘நமசிவாய’ மந்திரத்தை சொன்னால்? சிவனின் எல்லை கண்டு அவன் திருவடி சேரலாம்!
காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு:-
அவ்வாறு வாசியோகத்தை அறியாது, நாவானது காக்கப் படவில்லையெனின்? சிவனின் எல்லையைக் காணாது! அவனின் திருவடிகளை பற்ற இயலாமல் பிறவிப் பெருங்கடலில் தத்தளிப்பார்கள்!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

Leave a comment