“மூலை இருந்தாரை முற்றத்தே விட்டவர்
சாலப் பெரியர் என்று உந்தீபற
தவத்தில் தலைவர் என்று உந்தீபற”.
திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் அருளிய
திரு உந்தியார்.பாடல் 12.
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு.
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:340
பொதுப் பொருள் : (நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?
மெய்ப் பொருள்:
முற்றம்:- என்பதற்கு ‘வீட்டின் முகப்பு’ என்று பொருள் உள்ளது. அஃதினில் அவ்-வீட்டின் உரிமையாளர் எவரோ? அவருடைய பெயர் எதுவோ? அதுவே அவ்-வீட்டின் முன்பு எழுதப்பட்டிருக்கும்…
மூலை இருந்தாரை:-
(நோய்களுக்கு இடமாகிய) நிலையில்லாத உடம்பில், இஃதுவரையில் அறியாமை எனும் இருளினால் சூழப்பட்டு, ஒரு மூலையில் குடிகொண்டிருந்த இவ்வுயிரை…
சாலப் பெரியர்:-
ஒப்புமைக்கு அப்பாற்பட்டதாக
உள்ள சிவமே ஸத்குருவாக வந்து, “மானுடராக்கை வடிவு சிதம்பரம்”
எனும் திருமந்திரச் சொல்லுக்கேற்ப, (நோய்களுக்கு இடமாகிய) நிலையில்லாத இம்-மானுடராக்கையை
‘தேகம் சிவாலயம்’ எனும் சிதம்பரமாக (கோயிலாக) மாற்றி…
தவத்தில் தலைவர்:-
“மானுடராக்கை வடிவு சதாசிவம்” -திருமந்திரம்,
அவ்-வடிவினில் தாமே இடைவிடாத ‘தவமாக’ சதாசிவமாக, அத்-தவத்தின் தலைவராகவும் வீற்றிருந்து…
முற்றத்தே விட்டவர்:-
அஃது வரையில் நிலையில்லாத
இவ்-உடம்பினுள், அறியாமை எனும் இருளினால் சூழப்பட்டு, ஒரு மூலையில் குடிகொண்டிருந்த இவ்வுயிரை, சிவ ஜோதி வடிவாக மாற்றி, அஃது குடிகொண்டுள்ள தேகத்தையும் நிரந்தர சிவாலயமாக ஆக்கி, மூலையில் இருந்த இவ்வுயிரை முற்றத்தே விட்டு…

அருட்பிரகாச வள்ளலார், சுவாமி விவேகானந்தர், என அவரவர்கள் கொண்ட பெயரினிலேயே (முற்றத்தே விட்டு) ‘உலகறியச் செய்த’ சிவகுருவே போற்றி போற்றி போற்றி!
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

