திருமூலரின் திருமந்திரம்: 6
“அவனை ஒழிய அமரரும் இல்லை
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை
அவன் அன்றி மூவரால் ஆவது ஒன்று இல்லை
அவன் அன்றி ஊர் புகுமாறு அறியேனே”.
அமரத்துவத்தை அடையப் பெற்ற சான்றோர்கள் யாவருமே அருளே வடிவாய் விளங்கும் ‘சிவமேயாம்’. அருள் அற்ற (அவனை ஒழிய) அமரர்கள் என்பது எக்காலத்தும் இல்லை!
அவன் அன்றிச் செய்யும் அரும் தவம் இல்லை:-
அரும் தவம் என்பதே சதா சிவமாய் இருப்பதே. “அவனன்றி ஓர் அணுவும் அசையாது”, அசைவின்றி அரும் தவத்தை ஆற்றுவது என்பதும் இயலாத ஒன்று!
மூவர்கள் என்பவர்கள் ‘படைத்தல், காத்தல், அழித்தல்’ என்னும் மூன்று தொழில்களுக்கு அதிபதிகள். இம்மூன்று இயக்கங்களுக்கும்
(அசைவுகளுக்கும்) காரணமான ‘இசைவாகவே’ அவன் உள்ளதால், அவனன்றி இம் மூவரின் தொழில்களும் செயலற்றதாகவே இருக்கும்.
இவ்வாறு அசையும் இசையும் இணைந்த சிவமாக, அதுவே பேரருளாக இருக்கும் அவன் அன்றி , ஊர் என்னும் இத் தேகத்துக்குள் புகுந்து அவ்-அருளுக்கு மாறாக அறிவதற்கு ஏதுமில்லை!
திருச்சிற்றம்பலம் 🙏

