திருமூலரின் திருமந்திரம்:-
“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே”
‘தான்’ என்பதின் மூலம் ‘மனம், பிராணன், பஞ்சபூதங்கள்’ எனும் இம்மூன்றின் கலவையே. இம்மூன்றுக்கும் உற்பத்தி ஸ்தானம் ஆதிமூலமாகிய சிவமே. ‘மனம் சிவத்தில் அடங்க பிராணனும், பிராணன் சிவத்தில் அடங்க மனமும் அடங்கும்’ என்பது பகவான் ரமண மகரிஷியின் அருள்வாக்கு. இவ்விரண்டும் அடங்க பஞ்சபூதங்களும் சிவத்தில் அடங்கிவிடும். ஏனெனில் இம்மூன்றும் ஒரே சமயத்தில் ஆதிமூலமான சிவத்தில் தோன்றி, ஒரே சமயத்தில் சிவத்தில் மறையக் கூடியவை…
ஆனால் இப் பிராணனுடன் தோன்றிய ‘மனம்’ மட்டும் தான் குடிகொண்டிருக்கும் தேகத்தை விட்டு, வெளியில் வெவ்வேறு உருவங்களை மாறி மாறி விதவிதமாக பற்றிக்கொண்டும், திரிந்துக் கொண்டும், மென்மேலும் பிறவிக்குக் காரணமான கர்ம வாசனையை அதிகரித்துக்கொண்டே இருக்கும்…
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்:-
தன்னுடையதாக இருக்கும் தம் ‘தேகத்தை’ தானாக இருக்கும் ‘மனமும் பிராணனும்’ இணைந்து அறியாததால், இத்தேகத்தில் முதுமை ஏற்பட்டு உடல் உறுப்புக்கள் செயலிழக்கத் துவங்கியவுடன், ‘மனம்’ தம் கர்ம
வாசனைகேற்ப செயல்பட வேண்டி வேறு ஒரு தேகத்தை நாடிச் செல்லும். ‘மனம் போன போக்கில் பிராணனும்‘ அதனுடனேயே செல்லும். இவ்வாறாக அறியப்படாத தேகம் மீண்டும் மீண்டும் கெட்டுக்கொண்டே , பிறந்து பிறந்து இறந்து கொண்டே இருக்கும்…
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை:-
மாறாக பிராணன் போகும் போக்கில் மனம் சென்று, இவ்விரண்டும் இணைந்து தான் குடிகொண்டிருக்கும் தேகத்தை அறிந்தால், பிறப்பு இறப்பு என்னும் கேட்டிலிருந்து விடுபடும்…
இவ்வாறு மனம், பிராணன், பஞ்ச பூதங்களின் கலவையான தேகம் என்பதாக இருக்கும், ‘தன்னை‘ அறியும் அறிவை ‘அறிவால்’ அறிந்தபின்…
இறுதியில் ‘ மனம் பிராணன் ‘ இவ்விரண்டும் ஆதி மூலமான சிவத்திலேயே அடங்க, அதே சிவ சக்தியால் தோன்றிய பஞ்ச பூதங்களின் கலவையான இவ்வுடம்பும் ஆதிமூலமான சிவ ஜோதியில் அடங்கும்! இவ்வாறு ஒன்றானவனுடன் ஒன்றாக ஒன்றிய பின்…அவனை அர்ச்சிக்க அவனே இருந்தானே!
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானு மெய்கலந்து அனுபவித்த அளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே”.
சிவவாக்கியர்:(329)
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

