“எத்தனே! சிக்கெனப் பிடித்தேன்”

திருவாசகம் “பிடித்த பத்து”-8

ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
“எத்தனே! உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே”? இது மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகத்தில் பிடித்த பத்து என்னும் பதிகத்தில் உள்ள எட்டாவது பாடலில் உள்ள வரிகள்.

எத்தன்: என்பதற்கு ஏமாற்றுவோன் என பொருள் உள்ளது.
அதாவது பார்வை, பார்க்கப்படும் பொருள், பார்ப்பவன் மற்றும் நினைவு, நினைக்கப்படும் பொருள், நினைப்பவன் என்ற மூன்று விதமான தன்மைகளில், ஒருவர் சிவபெருமானை பார்ப்பவனிலும், பார்க்கப்படும் பொருளிலும் அதுபோன்றே நினைப்பவனிலும், நினைக்கப்படும் வஸ்துவிலும் அவனை கண்டறிய இயலாது.

“பார்ப்பவனின் பார்வையாகவும் நினைப்பவனின் நினைவாகவும் இருக்கும் பரமேஸ்வரனை யார் பார்க்கின்றானோ அவனே பார்க்கிறான்” என்பது வேதத்தில் உள்ள உபநிஷத்தின் கருத்துக்கள். அதன்படி சிவபெருமான் ஒவ்வொருவரின் பார்ப்பவனின் பார்வையாகவும், மற்றும் நினைப்பவனின் நினைவாகவும், மறைபொருளாக அதாவது எத்தனாக தன்னை மறைத்துக் கொண்டு இருக்கிறார்.

எனினும் “எத்தனுக்கும் எத்தனான” மணிவாசகப் பெருமான், பார்ப்பவனின் பார்வையிலும், நினைப்பவனின் நினைவிலும் எத்தனாக்க மறைந்திருக்கும் இருக்கும் பரமேஸ்வரனை கண்டறிந்து,

“சிக்கெனப் பிடித்தேன்;
எங்கு எழுந்தருளுவது, இனியே ? என்பதாக, மணிவாசகப் பெருமான் சொல்லிய இப்பாட்டின் பொருள் இது எனக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏