திருவாசகம் பிடித்த பத்து- 2

“கருணை மா கடலே! இடைவிடாது, உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே”?
இது மாணிக்கவாசகரின் பிடித்த பத்து பதிகத்தில் உள்ள இரண்டாவது பாடல்.
அவ்வாறு சிவபெருமானின் திருவடிகளைப் பற்றிய பற்றானது இமைப்பொழுதும் விலகாமல், இடைவிடாது தொடர்ந்து பற்றியபடியே இருக்க வேண்டும்.
ஏனெனில் ‘சிக்கெனப் பிடித்த’ இறுக்கத்தில், உறுதியில் ஒரு சிறிது தொய்வு ஏற்பட்டாலும் கூட…ஒரு வெற்றிடம் ஏற்பட்டு அஃது வெறுமையால் நிரப்பப்பட்டு விடும். அதாவது அதுவரை கிட்டிய அவனது ‘அருளறிவு மருளறிவாக’ மாறிவிடும்.
ஆகையால்தான் மணிவாசகப் பெருமான் கருணை மா கடலே! உன்னைச் சிக்கெனப் பிடித்ததோடு இல்லாமல் இடைவிடாது தொடர்ந்தும் பற்றிக்கொண்டே இருக்கிறேன், ஆகவே எங்கு எழுந்தருளுவது, இனியே”? என சொல்லிய இப்பாட்டின் பொருள் எனக் கொள்ளலாம். மேலும்,
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.” இது வள்ளுவரின் திருக்குறள்.
பற்றுக பற்றற்றான் பற்றினை: பற்றற்றவனாக இருக்கும் சிவபெருமானின் திருவடிகளை சிக்கெனப் பற்றுக…
அப்பற்றைப் பற்றுக: அவ்வாறு சிவபெருமானின் திருவடிகளை சிக்கெனப் பற்றிய அப்பற்றில், தொய்வு ஏற்படாதிருக்க இடைவிடாது தொடர்ந்து பற்றியபடியே இருக்க, ஏனெனில்…
பற்று விடற்கு: மருளறிவு என்னும் அறியாமை முழுவதும் விட்டு விலகுவதற்காக என்னும் வள்ளுவப் பெருமானின் குறளின் பொருளோடும் மாணிக்கவாசகரின் இப் பாடலின் பொருள் ஒத்துப் போகின்றது.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏
ht

