“மெய்பொருள் காண்பதே அறிவு”

அப்பர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை
“பொந்தையைப் பொருளா எண்ணிப் பொருக்கெனக் காலம் போனேன்;
“எந்தையே! ஏகமூர்த்தி!” என்று நின்று ஏத்தமாட்டேன்;”

பொந்தை: என்பது உடலை குறிக்கும் சொல். இதுபோன்று இவ்வுடலை குறிப்பதற்கு தமிழில் ‘மெய்’ என்றும் ஒரு சொல் உள்ளது. ‘மெய்’ என்பதற்கு ‘உடல் மற்றும் உண்மை’ என்று பொருள்கள் உள்ளது. ‘மெய்பொருள் காண்பதே அறிவு’ என்பது வள்ளுவப் பெருமானின் திருவாக்கு.
அப்பர் பெருமான் தாம் சமணமதத்தை தழுவி இருந்தவரை தமது உடல் மெய்ப்பொருள் காணாத, ஒன்றுமில்லாத பொந்தையாக (ஓட்டையாக) இருந்தது, ஆயினும் அஃதினையே பொருளாகவும் எண்ணி வீணில் கழிந்த காலத்தையே இங்கு குறிப்பிடுகிறார்.

அப்பர் பெருமானை சிவபெருமான் ஆட்கொண்டபின் அவரது உடல் மெய்யுடலாக, அதாவது பொந்தைப் பொருள் மெய்யை (சிவத்தை) பொருளாக கண்ட அறிவாகி, பொந்தை மறைந்த மெய்யாக (உண்மையாக), மெய்யுடன் (உடலுடன்), திருப்புகலூர் அக்னீபுரீஸ்வரருடன் சித்திரை சதய நட்சத்திரத்தில் நான்காம் ஜாமத்தில் ஜோதி வடிவாக இரண்டறக் கலந்தது.
அதாவது சிவம் எனும் மெய்(உண்மை) பொருளாகாத வரையில் ஒவ்வொரு மானுட யாக்கையுமே பொந்தை பொருளே. மெய்யில் (உடம்பில்) சிவம் பொருளாகி மெய்சிவமானால், ஒவ்வொரு மானுட யாக்கையும் சிவலிங்கம் என்பதையே, அப்பர்பெருமான் சொல்லிய இப்பாட்டின் பொருள் எனக் கொள்ளலாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏