திருவாசகம் – திருப்பூவல்லி
“இணையார் திருவடிஎன்
தலைமேல் வைத்தலுமே
துணையான சுற்றங்கள்
அத்தனையுந் துறந்தொழிந்தேன்”
இணையார்: இணை என்பதற்கு ஒப்புமை என்று பொருள்.
ஆகவே இணையார் என்பது ஒப்புமைக்கு அப்பாற்பட்ட , அவனுக்கு இணையாக எனக்கொள்ள எவரும் இல்லாதவர் என்றும் பொருளாகிறது. அப்படிப்பட்ட இணை வைக்கவே இயலாத அவன் திருவடிகள் தம் தலைமீதும் படவேண்டுமென எவரும் விரும்பின்…
‘இணையார்’ என்பதற்கு எதிர்மறை சொல்லாக
‘துணையார்’ என்பதைக் கொள்ளலாம். அதாவது இணை வைக்கவே இயலாத அவனுக்கு இணையாக எப்போது மற்றொன்றையும் கருதுகின்றோமோ அப்போதே ‘இணையார்’ என்பது இயல்பாகவே மறைந்து போய் ‘ துணையார்’ என்பதாகவே மாறிவிடும்…
துணையாக இருக்கும் மெய், வாய், கண், செவி, நாசி எனும் ஐம்புலன்கள், இவ்வுடம்புடன் தொடர்பு கொண்ட ஏனைய சுற்றங்கள், நட்புகள் போன்ற யாவையும் ‘துணையார்’ எனக்கொள்ளலாம். எவரொருவருக்கு துணையாக கருதிய இச்சுற்றங்கள் அனைத்தையும் மணிவாசகப் பெருமான் போன்று ஒரு கணத்தில் துறந்தொழிக்கும் திறன் உள்ளதோ!!
அத்தகையவருக்கே ‘இணையார்’ என்று தொடங்கும் திருவாசகத்தின் இப்பதிகத்தை போற்றிப் பாடும்போது அவனின் திருவடிகள் அவர்கள்தம் தலைமீதும் படும் பெரும்பேறு கிட்டும். ஆலயத்திற்கு சென்று இருகரங்களையும் தலைக்கு மேல் கரம்கூப்பி வணங்குவதும் இதன் பொருட்டேயாம்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏

