முதல் திருமுறை(சம்பந்தர் தேவாரம்):565
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக்
கூட்டியோர்வெங் கணையால்
மாறுகொண்டார் புரமெரித்த
மன்னவனே கொடிமேல்
ஏறுகொண்டாய் சாந்தமீதென்
றெம்பெருமா னணிந்த
நீறுகொண்டா ரிடர்களையாய்
நெடுங்களமே யவனே.
பொ-ரை: திருநெடுங்களம் மேவிய இறைவனே,
‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம்,‘அகாரம், உகாரம், மகாரம்’, என்னும் மூன்று தனி்த்தனி மாத்திரைகளை கொண்டதாகவும், (மாத்திரை என்பது கால அளவை குறிக்கும் சொல்), மூன்று மாத்திரைகளும் சேர்ந்த, இரண்டற்றதாயும், சிவமாயும், பிரபஞ்சம் லயிக்கும் இடமாயும்,மாத்திரை அற்றதாயும் ஓம் என்னும் அஷ்ரமாகவும், ஆத்ம ஸ்வரூபமாகவும் இருக்கிறது.
இதில் அகாரம், என்பது விழிப்பு நிலையினையும்,
உகாரம், என்பது கனவு நிலையினையும்,
மகாரம், என்பது உறக்க நிலையினையும்,குறிக்கின்றது. அதாவது இப் பிரபஞ்சம் என்பதே
அகாரம், உகாரம்,மகாரம், என்னும் மூன்று மாத்திரைகளை தனித்தனியே கொண்ட சப்த அலைகளாகவே இருந்து கொண்டு இருக்கிறது. இப்பிரபஞ்சத்தில் தோன்றித் தோன்றி மறையும் எல்லா உருவங்களும் விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் இம்மூன்று அசுர நிலைகளுக்குள்ளும் மாறி மாறி, அவையவைகளுக்குள்ள கால அளவுடன், தனித்தனி சப்த அலைகளாகவே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.
பிரச்னோ உபநிஷத்:5.6
“ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளும் தனித்தனியே
உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை.
மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால், அவை அங்ஙனமாகா”.
இவ்வாறு மாத்திரையே இல்லாத ஓம் என்னும் அஷ்ரத்தை உபதேசிக்க கூடிய, பேராற்றல் கொண்ட ஸத்குரு காண்பதிற்கு அரிதிலும் அரிதாம். கிடைத்தற்கரிய இப்பேற்றை…. ‘திருநெடுங்களம் மேவிய இறைவன் அணிந்துள்ள திருநீற்றை விரும்பி அணியும் அடியவர்கள் அனைவருக்குமே கிட்டவேண்டும் என திருஞானசம்பந்த பெருமான் இறைவனிடம் விண்ணப்பிக்கிறார்’.
திருச்சிற்றம்பலம் 👏

