திருமூலரின் திருமந்திரம்:1789.
“அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே”.
“அவனும் அவனும் அவனை அறியார்”
மானுடப் பிறவியாக உருவெடுத்த இவ்வுயிரையும் (அவனும்) இவ்வுடம்பையும் (அவனும்) பிணைத்துக் கட்டியிருக்கும் உயிருக்கு உயிராய் விளங்கிக் கொண்டிருக்கும் அவனை ஒருவரும் அறியார்….
அத்தகைய உயிருக்கு உயிரான அவனை (சிவனை) அறிந்தபின் அங்கு அறிவு, அறியப்படும்பொருள், அறிபவன் என்னும் மூன்று தன்மைகளும் மறைந்து போய்விடுவதால் ‘அறிவானும் இல்லை’ என்றாகிப் போகும்….
“அவனும் அவனும் அவனை அறியில்”
அவ்வாறு மானுடப் பிறவியாக உருவெடுத்த இவ்வுயிரும் (அவனும்) இவ்வுடம்பும் (அவனும்), தம்மை பிணைத்துக் கட்டியிருக்கும் வாசிக்குள் வாசியான சிவத்தை (அவனை) அறிந்தபின்….
“அவனும் அவனும் அவனிவன் ஆமே”
‘மெய்யை விட்டு உயிர் பிறிவு’ என்பதே ஏற்படாத வண்ணம் தூயஅறிவு மயமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும் சிவமே இவ்வுயிராகவும், இம்மெய்யாகவும், இம்மெய்யுடன் கலந்த உயிராகவும், உயிர்மெய் எழுத்தாகவே அருட்பெருஞ்ஜோதியாகவே ஆகிவிடும்.
அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி”
அருட்பெருஞ்ஜோதி அகவல் (285)
திருச்சிற்றம்பலம்🙏

