“சிதம்பர ரகசியம்” எது ரகசியம்?
எதுவொன்று அறியத்தக்கதாகவும், அதே வேளையில் அவ்-அறிவுக்கு அவ்வளவு எளிதில் புலப்படாத தாகவும், ஆனால் எப்பொழுதும் இருந்துகொண்டும் உள்ளதோ அதுவே ரகசியம். அது எஃதெனின் அண்ட சராசரத்தின் நுட்பங்களை எல்லாம் வெளிப்படுத்தும் ‘அறிவு’ என்னும் சுடர்க் கடவுள். அஃது எவராலும் எளிதில் அறியப்படாமல் ‘சித்’ தாகவே இருந்துகொண்டிருக்கிறது.
எந்தவொரு பொருளையும் அறிய வேண்டுமெனின் அதன் தன்மை வழியாகவே அப்பொருளை அறிய இயலும். எடுத்துக்காட்டாக பாலின் தன்மையான வெண்மை என்னும் மூலம் வழியாகவும், அதுபோன்று நெருப்பின் தன்மையான உஷ்ணம் என்னும் மூலம் வழியாகவும் பாலையும், நெருப்பையும் எவ்வாறு அறிந்து கொள்கின்றோமோ அவ்வாறே….
அறிவின் தன்மையாக விளங்கும் ‘அம்பரம்’ எனும் ‘வெட்டவெளி பிரகாசமே’ அவ்-அறிவினை உணர்ந்து கொள்ளும் இரகசிய மார்க்கமாகும். சிதம்பரம் கோயில் சித்சபையில் முதன் முதலில் தென்படுவது நடராஜப் பெருமானின் திருவுருவமே. அடுத்து சிதம்பர ரகசியத்தை பெருமானின் சித்சபையில் திரை நீக்கி காண்பிக்கும் போது இத்- திருவுருவம் தென்படாது. அதாவது இத் திருவுருவம் மறைந்தபின் மாயத்திரையும் விலக, வெளிப்படும் ‘வெட்டவெளிப் பிரகாசத்தில்’ மீண்டும் மறுமுறை காணப்பெறும் நடராஜப் பெருமானின் திருவுருவம் உருவமும் அன்று, அருவமும் அன்று. இவ்விரண்டின் தன்மைகளும் கலந்த சிவஸ்வரூபம்.
திருஞானசம்பந்தப் பெருமான் திருமணத்தின் போது தம்முடன் கூட இருந்த அனைவருக்கும் இவ்-வெட்டவெளி பிரகாசத்தில், உருஅருவாய் விளங்கும் சிவஸ்வரூபத்தை காண்பித்து அனைவருடன் தாமும் அச் சிவஜோதியில் இரண்டறக் கலந்தது போன்று…
“காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது
நாதன் நாமம் நமச்சி வாயவே”.
என்று திருஞானசம்பந்தப் பெருமான் உள்ளம் உருகி பாடியபடி,
‘காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி’ நின்றால் சிவனருள் கூடி வெட்டவெளி வழியே சிவஸ்வரூபத்தை கண்டு அதாவது சிதம்பர(சித்+அம்பரம்) ரகசியத்தை அறியப் பெற்று, அனைவருமே சிவஜோதியில் இரண்டறக் கலக்கலாம்.
திருச்சிற்றம்பலம்🙏

