“வெட்ட வெளிதன்னை மெய்யென் றிருப்போர்க்கு
பட்டய மேதுக்கடி குதம்பாய் பட்டய மேதுக்கடி”.
குதம்பை சித்தர் பாடல்: 215
வெட்டவெளி: என்பதற்கு பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே!
பட்டயம்: என்பதற்கு ஒருபொருளை சொந்தம் கொண்டாட ஒருவர் பயன்படுத்தும் தாமிர சாசனம்.
பெயர் உருவம் இனம் ஜாதி மதம் மொழி உறவுகள் அந்தஸ்து தேசம் போன்ற இவைகள், மனிதனாக பிறப்பெடுத்த ஒவ்வொருவருமே தம்மைத் தாமே சுட்டிக் காட்டிக் கொள்ள பயன்படுத்தும் ‘மெய்’ இல்லாத (உண்மை இல்லாத) பட்டயங்கள். ஏனெனில் இப்பிறவி மறையும்போது இதனோடு தொடர்புடைய பட்டயங்களும் மறைந்து போகும். இவ்வாறாக காலங்கள் மாற மாற பிறவிதோறும் பட்டயங்களும் மாறிக் கொண்டேதான் இருக்கும்.
சுட்டும் தன்மை அற்ற வெட்ட வெளியே மெய்யென்று உணர்ந்த சித்தர் பெருமக்கள் தம் மெய்யையும் (தன் உடம்பையும்) அவ் வெட்டவெளியில் இரண்டற கலக்கும் திறன் கொண்டதினால், பட்டயம் என்று போடுவதற்கு ஏதுமில்லாமல் தன்னில் தானே சுகித்து இருப்பார்கள்.
“சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளிஎனும்
அட்டமேல் சிற்சபை அருட்பெருஞ்சோதி”
அகவல்:73

