“நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
காக்கும்எம் காவலனே காண்பரிய பேரொளியே“
(நோக்கரிய நோக்கே🙂
நோக்கு என்பதற்கு ‘கண் என்றும் பார்வை‘ என்றும் இரு பொருள் உள்ளது. இவ் ஊனக் கண்களால் உலகம் அனைத்தையும் காட்சிப் பொருளாக காண வைக்கும் ‘பார்வை என்னும் பார்க்கும் சக்தி‘ இம்–மானுட தேகத்துனுள் சிவமயமாகவே குடிகொண்டுள்ளது. எனினும் காட்சியாக பார்ப்பவன் தன்னுள் குடிகொண்டிருக்கும் அச்–சிவத்தை தம்முடைய ஊனக் கண்ணினால் கண்டு அறிவது என்பது இயலாது…
“காட்சியும் கானாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி“
(அகவல்:153)
(நுணுக்கரிய நுண்ணுணர்வே🙂
ஏனெனில் அச்–சிவமானது எத்தகைய கூர்மையான அறிவைக் கொண்டும் அறியவொண்ணாத நுண்ணிய உணர்வாக இம்–மானுட தேகத்துனுள் குடிகொண்டுள்ளது.
“பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி”
(அகவல்:151)
(போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே🙂
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம், புத்தி, அகங்காரம் என்னும் எட்டுவித பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒவ்வொரு மானுடதேகமும், நுண்ணுணர்வாய் இம்–மானுட தேகத்துனுள் விளங்கிக் கொண்டிருக்கும் அச்–சிவத்தினாலேயே நிலை பெற்றுக் கொண்டுள்ளது. அதாவது எங்கும் சஞ்சரிக்கும் காற்று எவ்வாறு ஆகாயத்தில் நிலை பெற்றுள்ளதோ அதைப் போன்று, ஆண் பெண் புணருதலால் மீண்டும் மீண்டும் பிறந்தும் கொண்டும் இறந்து கொண்டும், போக்கும் வரவுமாகவே இருந்து கொண்டிருக்கும் இம் மானுட தேகங்களில்…
சிவமானது போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனாக, இவ் ஊனக் கண்களால் காண்பதற்கரிய...
பேரொளியாக, சிவனருளால் அச்– ஜோதியை கண்டவர்களுக்கு மீண்டும் பிறவாமல் காக்கும் காவலனாக, ஒளிர்ந்து கொண்டிருக்கும் அச்சிவத்தை தம்முள் உணர்ந்த மணிவாசகப் பெருமானும், வள்ளல் பெருமானும், திருவாசகம் மற்றும் திருவருட்பாவில் இவ்வாறு புகழ்ந்து பாடியுள்ளார்கள்.
“போக்கும் வரத்துமிலாப் பூரணமாய்ப் புண்ணியர்கள்
நோக்கும் திறத்தெழுந்த நுண்ணுணர்வாய் “-
நெஞ்சறிவுறுத்தல்: திருவருட்பா
சாய்ராம்.

