“குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்”.
குறள் 705:பொருட்பால், அதிகாரம்: குறிப்பறிதல்
பொதுப்பொருள்:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக்குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புகளுள் கண்கள் என்னப் பயன்படும்.
மெய்ப்பொருள்:
குறிப்பு என்பதிற்கு உட்கருத்தை வெளிப்படுத்துதல் என்று பொருள். இத்தகைய குறிப்பு மனிதர்களிடமிருந்து மட்டும் வெளிப்படுவதில்லை. இப் பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா வகையான ஜீவராசிகள், பஞ்ச பூதங்கள் ஒன்பது வகையான கோள்கள், மற்றும் நட்சத்திரங்கள் போன்ற இவைகள் யாவுமே இடைவிடாது ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான குறிப்புக்களை சதா வெளியிட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
இவ்வகை குறிப்புக்களின் உட்பொருளை கண்டு அறியும் திறன் கொண்டவர்களின் உறுப்புக்களின் கண்கள் அறிவுக் கண்கள் அல்லது ஞானக் கண்களே! வள்ளுவப் பெருமானின் மற்றொரு குறளான
“குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்”.(703)
என்னும் குறளின் உட்கருத்தின் படி, இத்தகைய குறிப்பறியும் திறன் கொண்டவர்களின் ஏனைய உறுப்புக்கள் அவர்தம் ஞானக் கண்களுக்கு தம் சக்தி முழுவதையும் அளிக்கும்.
மாறாக இவ்வகை குறிப்புக்களின் உட்பொருளை உணர இயலாதவர்களின் உறுப்புக்களின் கண்கள் பயனற்ற வெறும் ஊனக் கண்களே. அதாவது பார்வை இருந்தும் குருடர்களே!!
சாய்ராம்.


