“நாளென ஒன்றுபோற் காட்டி உயிர்ஈரும் வாளது உணர்வார்ப் பெறின்”. அதிகாரம்: நிலையாமை:குறள்:334
பொதுப்பொருள்: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.
மெய்ப்பொருள்: ஒரு நாள் என்பது ஒரு பகல் ஒரு இரவு இவ்விரண்டின் கலவையே. ஆனால் பகல் இரவு என்னும் கால வித்தியாசத்தை உணராவண்ணம் ஒவ்வொரு நாளையும் ‘ஒன்றுபோற் காட்டிடும்’ காலம் போன்று…
உயிர், மெய் என்னும் இவ்விரண்டின் கலவையால் ஆன மனிதப்பிறவி அதன் பிரிவை உணராமல், ‘நாளென ஒன்றுபோற்’ இப்பிறவியையும் ஒன்றனவே பார்த்து ஒவ்வொரு நாளையும் போக்கிடின்…
இறுதியில் அதே ‘நாள் என்னும் காலம்’ வாள் போன்று மாறி இம் மெய்யில் இருந்து உயிரை அறுத்துக் கவர்ந்து சென்றுவிடும்…
பகவத் கீதை: அத்தியாயம்:2 “உயிர்கள் அனைத்துக்கும் எது இரவோ அதில் யோகி விழித்திருக்கிறான் உயிர்களெல்லாம் துய்த்துணரும் நிலை தத்துவ ஞானிக்கு இரவு”(69)
அதாவது இந் நிலையாமையை உணர்ந்த தத்துவ ஞானிகள் ஒன்றுபோல் காட்டிடும் நாளின் தன்மையை அறிந்து பகலில் இரவையும், இரவில் பகலையும் காண்கிறார்கள். அதாவது தமக்கு கிட்டிய மனிதபிறவியை ஒன்றெனக் காணாமல் அஃதினில் இருக்கும் உயிரையும் மெய்யையும் அறிந்து…
உயிரில் மெய்யையும், மெய்யில் உயிரையும் உணர்ந்து, உயிர்மெய் ஆனவர்களாக, இக்-காலத்தை வென்றவர்களாக மாறுகிறார்கள் என்று பொருள் கொள்ளலாம். வள்ளல் பெருமானே இக் குறளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளார்!
“உயிருள்யாம் எம்முள்உயிர் இவை உணர்ந்தே. உயிர்நலம்பரவுக என்றுஉரைத்த மெய்சிவமே” (அகவல்:487)
சாய்ராம்.


