பிருஹதாரணியகோபநிஷத்து:
(கார்க்கி யாஜ்ஞவல்கியர் ஸம்பாஷணை ஆரம்பம்)
3:8.6.”எது வானத்திற்கு மேலும், பூமிக்கு கீழும், வானத்திற்கும் பூமிக்கும் இடையிலும் உள்ளதெனவும், எது இறந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் உள்ளதெனவும் கூறப்படுகிறதோ அது எதில் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டுள்ளது?” என்று கார்க்கி அம்மையார் கேட்டாள்.
3:8.7. “ஆகாயத்தில் அது குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப்பட்டுள்ளது. ” எதனிடம் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாக கோக்கப்பட்டிருக்கிறது ?”
3:8.8. ” கார்க்கி! பிரம்மஞானிகள் அதை அக்ஷரம் (அழிவற்றது) எனக் கூறுகிறார்கள். அது ஸ்தூலமுமன்று, ஸூக்ஷமமும் அன்று ; குட்டையுமன்று நெட்டையுமன்று ; (நெருப்புப்போல்) சிவந்ததன்று ; (தண்ணீர்போல்) ஈரமுள்ளதன்று ; நிழலுள்ள தன்று ; அளவுள்ள தன்று ; அதற்கு உள்ளுமில்லை புறமுமில்லை ; அது ஒன்றையும் உண்பது மில்லை, ஒன்றால் உண்ணப்படுவதுமில்லை ” என்றார் யாஜ்ஞவல்கியர்.
3:8.9-10. ” இந்த அக்ஷரத்தின் கட்டளையாலேயே சூரியனும் சந்திரனும் தத்தம் ஸ்தானங்களில் வைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த அக்ஷரத்தின் கட்டளையாலேயே வானமும் பூமியும் தத்தம் ஸ்தானங்களில் வைக்கப்பட்டிருக்கின்றன…கார்க்கி ! இந்த அக்ஷரத்தை அறியாமல் ஒருவன் இவ்வுலகில் பல்லாயிர வருஷங்கள் ஹோமம் செய்தாலும், யாகம் செய்தாலும், தவஞ் செய்தாலும் அது எல்லாம் முடிவுடையதாகும். கார்க்கி ! இந்த அக்ஷரத்தை அறியாமல் ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றால் அவன் கிருபணன் எனப்படுவான் ; இந்த அக்ஷரத்தை அறிந்துகொண்டு ஒருவன் இவ்வுலகை விட்டுச் சென்றால் அவன் பிராம்மணன் எனப்படுவான்.
3:8.11. ” கார்க்கி ! இந்த அக்ஷர வஸ்துவில் தான் ஆகாயம் குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப் பட்டிருக்கிறது.”
Interpretation:
இத்தகைய ஒப்புமைக்கு அப்பாற்பட்ட அக்ஷரத்தை ஒருவன் ஸத்குரு வாயிலாகவே அறிய இயலும். அவ்வாறு அறிந்தபின் அஃது ஸத்குருவின் ஒலியாகவே அவனுள்ளும் புறமும் இடையிலும், இடைவிடாது ஒலித்துக்கொண்டேயிருக்கும்.
இதில்தான் பஞ்சபூத சம்பந்தம் கொண்ட மானுட வடிவம் குறுக்கும் நெடுக்குமாகக் கோக்கப் பட்டிருக்கிறது. இஃதினை உணர்ந்தவனே பிராம்மணன் எனப்படுவான். அழிவில்லாதவன் இவனே !
இந்த அக்ஷரத்தை ஸத்குரு வாயிலாக அறியாமல் இவ்வுலகை விட்டுச் சென்றால் அவன் பிறப்பால் பிராமணனே ஆயினும், இவ்வுலகில் பல்லாயிர வருஷங்கள் ஹோமம் செய்தாலும், யாகம் செய்தாலும், தவஞ் செய்தாலும் அவன் கிருபணன் எனப்படும் கீழான பிறவியே !
சாய்ராம்.


