You Are That! – “Act without the doer”

“யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்

குயர்ந்த உலகம் புகும்”.

அதிகாரம்: துறவு: குறள் 346:

பொதுப்பொருள்:

உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

மெய்ப்பொருள்:

‘யான்’ என்பது தன்மை ஒருமை பெயர். அதாவது ‘நான்+எனது’ என்னும்
கூட்டுறவே ‘யான்’ என்பதாகும். ‘யான்’ என்னும் தன் முயற்சியால் செயல் நடைபெறுவதாக கருதும் எண்ணமே ‘செருக்கு’ எனக் கொள்ளலாம். ‘பார்வை’ அல்லது ‘பார்க்கும் திறன்’ என்பது எங்கும் நிறைந்த சக்தி. அது போன்று

‘நினைவு’ அல்லது ‘நினைக்கும் திறன்’ என்பதும் எங்கும் நிறைந்த சக்தி. எங்கும் நிறைந்திருக்கும் இச் சக்தியை தன்னுடையதாகிக் கொண்டு ‘நான் பார்க்கிறேன், நான் நினைக்கிறேன்’ என்று கருதிக்கொண்டு, செருக்கு அறுபடாமல் வாழ்ந்து கொண்டிருப்பதே தற்பொழுதைய உலகம்.
“பார்ப்பவனின் பார்வையாகவும், நினைப்பவனின் நினைவாகவும் இருக்கும் பரமேஸ்வரனை யார் பார்க்கின்றானோ அவனே பார்க்கிறான் என்று பகவத்கீதையில் சொல்லப்பட்டிருக்கிறது”.

அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பார்க்கும் திறனையும், நினைக்கும் திறனையும் தன்னுடையதாக மட்டுமே கருதும் அஞ்ஞானம் விலகி, அனைத்தையும் பரமேஸ்வர சக்தியாக காணும் மெய்ஞானம் கிட்டினால், செருக்கு ஏற்பட காரணமான ‘யான்’ என்னும் தன்மை ஒருமை பெயர் நீங்கபெற்று….
தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலையாகிய ‘யாம்’ என்னும் தன்மை பன்மை பெயரை அடையலாம்.

சாய்ராம்.

Leave a comment