You Are That! – “knower of the knowledge”

“நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு”. (குறள்:452)

பொதுப்பொருள்:

சேர்ந்த நிலத்தின் இயல்பால் அந்த நீர் வேறுபட்டு அந் நிலத்தின் தன்மையுடையதாகும், அதுபோல் மக்களுடைய அறிவு சேர்ந்த இனத்தின் இயல்பினை உடையதாகும்.

மெய்ப்பொருள்:

நீரின் தனிப்பட்ட இயல்பு சுத்தமே ஆகும், எனினும் அது சேர்ந்த நிலத்தின் இயல்பால் அதன் தன்மையே பறிபோய் விடுவது போன்று…

அறிவின் தனித்த இயல்பு தெய்வத்தன்மையுடன் கூடியது, பிரகாசிக்கக் கூடியதே, எனினும் அவ்வறிவு சேர்ந்த உடம்பின் (நிலத்தின்) தன்மையால், அவ்வுடம்பு சேர்ந்த இனத்தின் தன்மையால் மாறுபட்டு, அவ்வினத்தின் இயல்பு உடைய அளவே சுருங்கிவிடும்.
ஆத்திச்சூடியில் அவ்வையார்சான்றோர் இனத்து இரு”
என்று கூறுகிறார். ஏனெனில் ‘சான்றோர் இனம்’ என்பது
தூயஅறிவின் முழு ஆற்றலாய் சதா பிரகாசித்ததுக் கொண்டிருப்பது. சான்றோர் இனம்’ என்பது பாலின வேறுபாடுகளை கடந்தது. சாதி, மதம், சமயம் என்னும் வேறுபாடு அற்றது. ஏற்ற தாழ்வு இல்லாதது. தேசம் மற்றும் மொழிகளை கடந்து நிற்பது. விருப்பு வெறுப்பு அற்றது. என்றும் அருளுடையது.

“சாதியும் மதமும் சமயமும் காணா

ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி” அகவல்:115

இத்தகைய தன்மை கொண்ட ‘சான்றோர் இனத்துடன்’ (நிலத்துடன்) தூயஅறிவு என்னும் நீர் சேரும் போது, அவ்வறிவின் (நீரின்) தன்மை மாறாமல் அதன் முழு ஆற்றலையும் வெளிப்படுத்தும் என்னும் பொருள்பட வள்ளுவர் பெருமான் தம் குறளிலும், அவ்வை பிராட்டியார் தம் ஆத்திச்சூடியிலும், வள்ளல்பெருமான் தம் அகவலிலும் ‘சான்றோர் இனத்து இருந்து’ அருளியுள்ளார்கள்.
“அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவுதனில்

பிறிவுபட நில்லாமல் பிடிப்பதுஇனி எக்காலம்” ?
என்பது பத்திரகிரியாரின் மெய்ஞ்ஞானப் புலம்பல்.

சான்றோர் இனம் என்பதே தூயஅறிவின் வடிவம்.‘தூயஅறிவை’ இவ்வினத்தின் வழியாகவே ஒருவர் அறிய இயலும். மேலும் அறிந்த அவ்வறிவுதனில் ‘பிறிவுபட நில்லாமல் பிடிப்பது’ என்பது, அத்தூய அறிவை உருவின்(நிலத்தின்) வழியே அறிய முயலாமல், அறிவொளிப் பிரகாசமாகவே(நீரின் சுவையாகவே) கண்டு அஃதினில் ஒன்றினைவதே ‘பிறிவுபட நில்லாமல் பிடிப்பது’ என்பதாகும்.

பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்

அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி” அகவல்:113
சாய்ராம்.

Leave a comment