“புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்”. (குறள்:719)
பொதுப்பொருள்:
நல்லோர் நிறைந்த அவையில் மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், அறிவற்ற பொல்லாதோர் உள்ள அவையில் அறவே பேசாமாலிருப்பதே நலம்.
மெய்ப்பொருள்:
மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்களுக்கு, அம்-மெய்ப்பொருளை அறிந்து
கொண்டவர்களையும், அறிய இயலாதவர்களையும் எளிதில் அடையாளம் காணவும் இயலும்.
எவ்வாறெனின் அம்-மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடி உணர்ந்தோர் முகத்தில் தென்படும் ‘தெளிந்த அறிவுப்பிரகாசம்’, அத்தகையவரின் புரிந்து கொள்ளும் ஆற்றலை சொல்பவருக்கு கண்ணாடி போல் காண்பித்து விடும்.
அம்-மெய்ப்பொருளை உள்ளது உள்ளபடி உணர இயலாத அறிவற்ற பொல்லாதோர் முகத்தில் எவ்வித தெளிவும் தென்படாது. மாறாக வெறும் பகட்டு வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி, பொருள் புரிந்தது போல வர்ணிக்க முயலுவார்கள். மனத்தில் பதியும்படி கருத்துக்களை சொல்லும் வல்லமை பெற்றவர்கள், இத்தகையோரையும் எளிதில் அடையாளம் காண இயலுமாகையால், ஒன்று அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விடுவார்கள், அல்லது மௌனம் சாதிப்பார்கள் என்பதாக பொருள் கொள்ளலாம்.
சாய்ராம்.


