You Are That!- “சிதம்பர ரகசியம்”

ஓம்என்னும் பிரணவ மந்திரம்,அகாரம், உகாரம், மகாரம்’, என்னும் மூன்று மாத்திரைகளை கொண்டதாகவும், (மாத்திரை என்பது கால அளவை குறிக்கும் சொல்), 

மூன்று மாத்திரைகளும் சேர்ந்த, இரண்டற்றதாயும், சிவமாயும்பிரபஞ்சம் லயிக்கும் இடமாயும்,மாத்திரை அற்றதாயும் ஓம் என்னும் அஷ்ரமாகவும், ஆத்ம ஸ்வரூபமாகவும் இருக்கிறது. இதில் அகாரம், என்பது விழிப்பு நிலையினையும், உகாரம், என்பது கனவு நிலையினையும், மகாரம், என்பது உறக்க நிலையினையும், குறிக்கின்றது

அதாவது உயிர்களின் விழிப்பு நிலையினில்  அகாரம் என்னும் சப்தம் அதன் கால அளவுக்கு உட்பட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதுபோலவே கனவு நிலையினில் உகாரம் என்னும் சப்தமும், உறக்க நிலையினில் மகாரம் என்னும் சப்தமும் அதனதன் கால அளவுக்கு உட்பட்டு ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

அதாவது இப் பிரபஞ்சம் என்பதே அகாரம், உகாரம், மகாரம், என்னும் மூன்று மாத்திரைகளை தனித்தனியே கொண்ட சப்த அலைகளாகவே இருந்து கொண்டு இருக்கிறது

இப்பிரபஞ்சத்தில் தோன்றித் தோன்றி மறையும் எல்லா உருவங்களும்விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் இம்மூன்று நிலைகளுக்குள்ளும் மாறி மாறி, அவையவைகளுக்குள்ள கால அளவுடன், தனித்தனி சப்த அலைகளாகவே அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது.

பிரச்னோ உபநிஷத்:5.6

ஓம்காரத்தின் மூன்று மாத்திரைகளும் தனித்தனியே உபாசிக்கப்பட்டால், அவை அழியும் பலனைத் தருபவை. மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால், அவை அங்ஙனமாகா”.

மூன்றும் சேர்த்து உபாசிக்கப்பட்டால்– பிரணவத்தின் மூன்று மாத்திரைகளையும் சேர்த்து உபாசித்தால்  முப்புரங்களை எரித்து முக்தி எய்தலாம். திரிபுரத்தை பற்றி  புராணக்கதையில் உள்ள உட்கருத்தை சிந்தித்து உணரவேண்டும். மூன்று அசுரர்கள் இரும்பு, வெள்ளி , பொன்னாலான மூன்று பட்டணங்களில் வாழ்ந்து வந்தனர். பட்டணங்கள் அவர்கள் இச்சைப்படி ஆகாயத்தில் பறந்து செல்லும். மூன்றும், ஆயிரம் வருடங்களுக்கு ஒரு முறை ஒன்றுசேரும். இம்மூன்று அசுரர்களும் ஆகாயத்தில் பறந்து மக்கள் வசிக்கும் இடங்களில் இறங்கி அவர்களை அழித்து வந்தனர்.

எப்போது மூன்று பட்டணங்களும் ஒன்று சேர்கிறதோ அப்போது மூன்றையும் ஒரே பானத்தால் அடித்தால் ஜெயிக்கலாம். சிவபெருமான் அவ்வாறே மூன்றையும் தம் ஒரே பானத்தால் அடித்து வெற்றி வாகை சூடினார். இப்புராணக் கதை உணர்த்துவது 

முதல் மாத்திரையானஅகாரசப்தமான, விழிப்பு நிலையில் மட்டும் இருந்தது கொண்டு, மாத்திரையே இல்லாத ஓம்காரத்தை உச்சரிப்பதால் எந்தவொரு பலனும் கிட்டாது என்பதேயாகும்.

இவ்வாறு  ரகசியத்திலும் ரகசியமானஅகாரம், உகாரம், மகாரம்’, மூன்று மாத்திரைகளையும் சேர்த்து, மாத்திரையே இல்லாத ஓம் என்னும் அஷ்ரத்தை உபதேசிக்க கூடிய, பேராற்றல் கொண்ட ஸத்குரு காண்பதிற்கு அரிதிலும் அரிதாம். கிடைத்தற்கரிய இப்பேறு கிட்டிடின், கால வடிவான ஸம்வத்ஸரமான (அந்தமில்லாதது) விழிப்பு, கனவு, உறக்கம் என்னும் முப்புரங்களையும் ஒருசேர எரித்து முக்தி எய்தலாம். அதாவது காலஅளவை கடந்த, (மாத்திரைகள் அற்ற) பிரணவ மந்திரமான ஒம்கார ஸ்வரூபத்தை அடையப்பெற்று சிதம்பர நாதனின் திருவடி சேரலாம்.

பிருஹதாரணியகோபநிஷத்து:4.16

காலவடிவான ஸம்வத்ஸரம் (முடிவற்ற) பகல்களுடன் எவனுக்கு கீழ்ப்பட்டுச் சுழல்கின்றதோ, அந்த ஜோதிக்கு ஜோதியான
பரமாத்மாவை ஆயுளாகவும், அமிருதமாகவும் தேவர்கள் உபாசிக்கின்றனர்”.

சாய்ராம்.

Leave a comment