You Are That!- “knower of grace”

“வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லு மிடத்து”. :குறள் 250

பொதுப்பொருள்:

(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

“அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்

மருளறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே”

அருட்பெருஞ்ஜோதி அகவல்

அருளுடைமைக்கு பாத்திரமாகதவர்கள் அறிவுடைமைக்கும் பாத்திரமாகமாட்டார்கள்.இத்தகையொருக்கு அருளுடையோரை ஆராய்ந்து பார்க்கும் திறன் இல்லாததால், வெறும் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து
அருளுடையோரை மெலியார் எனக்கருதி, தன் வலிமையை காட்ட முற்படுவர்…

மெலியார் என நினைத்து தன்வலியை காட்ட முயலும் இத்தகைய அறிவீனர்களை, இயல்பாகவே பெருக்கெடுக்கும் அருளாளர்களின் வல்லமையானது அவர்களை உருத்தெரியாமல் அழித்து விடும் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம். மேலும் இதற்க்கு பட்டினத்தார் வாழ்வில் நடந்த சம்பவத்தை எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.

“பட்டினத்தார் தம்முடைய மகனாக வந்த மருதவாணர், ஒரு ஓலைமுறியில் ‘காதற்றவூசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்று எழுதி, உடன் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுக்கச் செய்தபின்னர் எல்லாவற்ரையும் விட்டுவிட்டு துறவியாக மாறினார்.

அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. குறிப்பாக அவருடைய தங்கைக்கு அறவே பிடிக்கவில்லை. ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டம் போட்டாள். ஒருநாள், “அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன்.

வந்து சாப்பிட்டுவிட்டுப் போ” என்று வீட்டிற்கு அழைத்தாள். அந்த அப்பத்தில் விஷத்தை கலந்துவிட்டாள். அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் விஷம் கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது. உடனே,

“தன் வினைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரையின்மீது வீசி எறிந்தார். உடனேயே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது”.

அதாவது பட்டினத்து ஸ்வாமிகளின் வெளித்தோற்றத்தை மட்டும் பார்த்து

(அருள் இல்லாத ) அறிவின்மையால் மெலியார் எனக்கருதி தன் வலிமையை காட்ட முற்பட, பின் அவருக்கே பட்டினத்து ஸ்வாமிகளிடமிருந்து வெளிப்பட்ட

அருள் வல்லமையானது எத்தகைய பாதகத்தை ஏற்படுத்தியது என்னும் இவ் நிகழ்வினை இக்குறளுக்கு எடுத்துக்காட்டாக கொள்ளலாம்.


சாய்ராம்.

Leave a comment