“வீடு பெற நில் “- ஆத்திச்சூடி
புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. – குறள்: 340
உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!. என்பது இக்குறளின் பொதுப்பொருள்.
இக்குறள் மூலம் வள்ளுவர் நமக்கு உணர்த்துவது யாதெனின்?
இவ்வுடம்பினுள் நிலையான இருப்பிடம் நாடி குடிகொண்டிருக்கும் இவ் உயிரானது, இதற்கு முன்னரும் இதுபோன்றே நிலைபெறும் பொருட்டு
அநேக தேகங்களில் வசித்து வந்துள்ளது என்பதும் புலனாகின்றது!
ஏனெனில் எடுத்துள்ள இப்பிறவிக்கு முன்னர் இவ்வுயிரானது உருவாகவேயில்லையெனின், அல்லது இப்பிறவிக்கு பின்னர் வேறு உடல் தேடி வேறெங்கும் செல்லாதெனின், அதாவது முற்பிறவியும் இல்லை மறுபிறவியும் இல்லையெனின், நிலையான இருப்பிடம் என்னும் இக்கேள்விக்கே இங்கு இடமில்லை!
அதாவது நிலையான இருப்பிடம் தேடும் இவ்வுயிரானது, அழியும் தன்மைகொண்ட ஒவ்வொரு உடம்பினையும் நாடி நாடி போய்கொண்டேயிருக்கும் அவலநிலையை இங்கு வள்ளுவர் இக்குறள் மூலம் நமக்கு எடுத்துரைக்கிறார். மேலும் நிலையான இருப்பிடம் இவ்வுயிருக்கு அமையவேண்டுமெனின், அழியும் தன்மை கொண்ட இப்பொய்யுடம்பும் அழிவற்ற மெய்யுடம்பாய், மெய் பொருளாகக்கூடியதாக மாறின், அதில் குடிகொண்டுள்ள இவ்வுயிருக்கும் நிலையான இருப்பிடம் அமையும் என்பதாக இக்குறளுக்கு பொருள் கொள்ளலாம்.
“வீடு பெற நில் “என்பது அவ்வையின் ஆத்திச்சூடி.
உயிர் குடிகொண்டிருக்கும் இவ்வீடானது (உடம்பானது) அவ்வுயிருக்கு நிலையான இருப்பிடமாக அமையின், அவ்வீடானதும் பெருமை பெற நிலைத்து நிற்கும்.
ஆகவேதான்,
“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”…
என்று தெளிவான திருமந்திரத்தை திருமூலரும் நமக்கு அளித்தார்.
அதாவது அழியும் தன்மை கொண்ட இப்பொயுடம்மை மெய்யுடம்பாக வளர்க்கும் திறன் ஒருவருக்கு ஸத்குருவின் அருளால் சித்திக்கின், அஃதில் குடிகொண்டிருக்கும் ‘இவ்வுயிரும் உடம்புடன் சேர்ந்து வளர்ந்து’ தனக்கென்று ஒரு நிலையான வீடாக அஃதினையே அமைத்துக்கொள்ளும்.
இம்மெய்யனுபவத்தை பெற்ற
அருட்பராகாச வள்ளலாரும் தன் பாடலில்
“மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி” என்று வர்ணித்துள்ளார்.
திருச்சிற்றம்பலம்🙏🙏🙏


