You Are That!- “self secure”

 ஆறுவது சினம்” 

சினம் என்னும் எதிரியை எதிர்த்துப் போரிடாமல் அடக்கி வைப்பதே போரின் உன்னதக் கலை.”  –சன் சூ என்பவரின் மேற்கோள்:

சுன் சூ என்பவர், படை வியூகங்கள் பற்றிய, மிகவும் புகழ் பெற்ற, பண்டைய சீன நூலான போர்க் கலை என்னும் நூலை எழுதினார் என நம்பப்படுகின்றது

Interpretation:

ஒருவர் தான் வெல்ல முடியாத எதிரி என்று கருதப்பட வேண்டியது அவருள்ளும் மற்றும் ஒவ்வொருவருள்ளும் குடிகொண்டிருக்கும் சினத்தின் தன்மையே ஆகும், இது திருவள்ளுவரின் கூற்றும் கூட.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்

தன்னையே கொல்லுஞ் சினம்

என்பது வள்ளுவரின் குறள்.

தன்னைத்தான் : தன்னுடையதாய் இருக்கும் உடம்பினை தானாகிய உயிர் காக்க விரும்பினால் சினம் காக்க !

சினம் என்னும் அரக்ககுணம் ஒவ்வொருவர் உடம்பிலும் குடிகொன்டே இருக்கும். அச்சினம் பொங்கிவராமல் ஆற்றப்படவேண்டும். எவ்வாறு நெருப்பில் பொங்கிவரும் பாலை ஆற்ற குளிர்ந்த நீர் பயன்படுகின்றதோ, அவ்வாறே பொங்கிவரும் சினத்தை ஆற்ற பொறுமை என்னும் குணத்தை பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஆற்றும் திறன் கொண்டவருள் !! ஆறுவது சினம்என்னும் அவ்வையின் வாக்கிற்கேற்ப சினம் என்னும் எதிரி பொங்காமல் எப்போதும் ஆறியபடியே (அடங்கியபடியே) இருக்கும். அதன்மூலம் இத்தகையோர் தன்னுயிரால் தன்

தேகத்தை காத்துக்கொண்டவராவார்கள் !!!

அவ்வாறு சினம் ஆற்றப்படாவிடின், அதாவது எதிரி அடக்கப்படாவிடின், எவ்வாறு பொங்கிவரும் பாலானது ஆதாரமாய் விளங்கும்  நெருப்பையே அணைத்து விடுகின்றதோ, அவ்வாறே ஆற்றப்படாத அடக்கப்படாத சினமானது, தன் தேகத்திற்கு ஆதாரமாய் விளங்கும் தன்னுயிரையே அணைத்து அழித்தும் விடும். அதாவது சினம் அடங்கப்பெறாத தேகத்தில் உயிரும் அடங்கப்பெறாது என்னும் பொருள்பட வள்ளுவர் இக்குறளை நமக்கு அளித்துள்ளார்.

கோபத்தை ஆற்றாமல் அல்லது அடக்காமல் பிடித்தே வைத்திருப்பது என்பது, தாம் விஷத்தை குடித்துவிட்டு மற்றவர் சாவதை எதிர்பார்ப்பது போன்றது என்று புத்தபிராணும் தம் உபதேசமாக அருளியுள்ளார்.

ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏿

Leave a comment